அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு, அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் வாழ்வை கடுமையாக பாதித்திருக்கின்றது.
அகதிகள் சார்ந்து இயங்கும் தொண்டு அமைப்பிடம் உதவி கோரி வரும் தொலைப்பேசி அழைப்புகள் ஆறு மடங்கு அதிகரித்திருப்பதன் மூலம் தற்போதைய நிலைமை மோசமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இணைப்பு விசாவில்(Bridging Visas) உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலைகளை இழந்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் வீடற்றவர்களாக மாறக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
ஒரு நாளைக்கு 40 – 60 அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்தவர்கள்.
இவ்வாறு இணைப்பு விசாவில் உள்ளவர்கள் அவுஸ்திரேலிய அரசின் மருத்துவ உதவித் திட்டத்திற்குள்ளோ, அரசின் பொருளாதார பாதுகாப்பு அம்சங்களுக்குள்ளோ உள்ளடக்கப்படவில்லை.
இதனால் இவ்விசாவில் பெரும் அச்சுறுத்தல் எதிர்கொண்டிருக்கின்றது.
தற்போது நிலவிவரும் பெருந்தொற்று அச்சம் காரணமாக, வீடற்ற நிலை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகள் மேலும் கூர்மையடையக்கூடிய ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகின்றது.
“சில பேர் பூங்காக்களில் உறங்குகின்றனர்,” எனக் கூறும் புனித பிரான்சிஸ் சமூக சேவைகள் அமைப்பின் நிர்வாக மேலாளர் மிரியம் பெல்லிகானோ, இதைவிட மோசமான நிலையிலும் வீடற்ற பலர் இருக்கக்கூடும் என்கிறார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.