யாழ்ப்பாணம் அத்தியடி பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி பூசை வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆலய பிரதமகுரு உள்ளிட்ட 21 பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 10 யுவதிகளும் உள்ளடங்குகின்றனர்.
சதுர்த்தி விரத பூசை வழிபாடு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் முன்பாக, சமூக இடைவெளி பேணி கதிரையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். இன்று அதிகாலை 12 மணிக்கு பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஊரடங்கு நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டபோது, வீடுகளிற்கு செல்ல வழியில்லாததால், மூவர் தமது மோட்டார் சைக்கிள்களில் ஒவ்வொருவராக அவர்களை வீடுகளிற்கு கொண்டு சென்று விடுவித்தனர்.
கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மத தலங்களில் ஒன்றுகூடுவதையும் தவிர்க்க அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் நேற்றைய செய்தியில் பேராசிரியர் ஒருவரும் கைதானதாக தெரிவித்திருந்தோம். எனினும், பேராசிரியர் யாரும் கைதாகவில்லையென்பது இன்று உறுதியாகியுள்ளது.