கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது அரச கடமைகளை செய்யத் தொடங்கிவிட்டார் என்கின்றன அந்நாட்டு ஊடகங்கள்.
பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார்.
எனினும் அவரது உடல் நலம் திடீரென மாறியதனால் லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தோமஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் மாற்றியதாகவும், சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் தொடர் சிசிச்சையில் இருந்த அவர், அதிலிருந்து மீண்டு வந்ததுடன், வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே அவர் ஓய்வெடுத்ததுடன், தனது அலுவலக பணிகளையும் கவனித்து வந்தார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடுவது, கொரோனா தடுப்பு நடவடிக்கை செயல்பாடுகள் பற்றி ஆலோசிப்பது போன்றவற்றை செய்து வந்தார்.
இந்தநிலையில் முழுமையாக குணமடைந்த நிலையில் அவர் முதன்முதலாக தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
லண்டன் டவுனிங் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு வந்த அவரை ஊழியர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். பின்னர் அவர் தனது பணிகளை கவனித்தார்.
பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் உரையாடினார். அவர் முழுமையாக குணமடைந்துள்ளதால் இனி வழக்கம்போல் செயல்படுவார் பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.