உலக நாடுகளைக் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் பாரிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இலங்கையிலும் தனது தாண்டவத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் 40 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று 63 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பு மக்களைப் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தொகையானது இலங்கையில் ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட எண்ணிக்கையாகப் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 24ஆம் திகதி ஆகக் கூடுதலாக 52 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
நேற்றுப் புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்தவர்கள் எனவும், 10 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிசறை கடற்படை முகாமிலிருந்து விடுமுறையில் பொலனறுவை சென்ற சிப்பாய் ஒருவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை கடந்த 22ஆம் திகதி அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்றுடன் மேலும் பல சிப்பாய்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவர் மூலம், சீதுவை இராணுவ விசேட முகாமிலுள்ள கப்டன் தர அதிகாரியான அவரது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீதுவை இராணுவ முகாம் நேற்றிலிருந்து முடக்கப்பட்டு அங்குள்ள இராணுவத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புத்துறைக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவியதையடுத்து முப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்பட்ட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் ஒப்பமிடப்பட்டு முப்படைகளின் தளபதிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய கொரோனா அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவிருந்த நிலையில், விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு அழைப்பதை இலகுபடுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 523 பேரில் 396 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை, 120 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 273 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.