கொரோனா தொற்றை மேலும் பரவாமலிப்பதற்காக மாகாணங்கள் தோறும் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
கண்டியில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல, வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகள் கிடைத்திருப்பதால் அரசாங்கத்திற்கு உடனடியாக தொற்றைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைத் துரிதமாக நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கம் புதிதாக கொரோனா தொற்று பரிசோதனை நிலையங்களை ஆரம்பிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. மாகாணத்திற்கு ஒன்று என்ற வகையில் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா பரிசோதனை நிலையங்களை அமைக்கும்படி கோரிக்கை விடுக்கின்றோம். விசேடமாக நான் பிரதிநிதித்துவம் பெறும் கண்டி மாவட்டத்தில் கண்டி பொது வைத்தியசாலையில் பரிசோதனை நிலையமொன்றை ஆரம்பிக்கக் கோருகிறேன்.
நாங்கள் எதிர்பார்த்தபடி அரசாங்கத்தின் முடக்கல் நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை என்பது தெரியவருகின்றது. ஆரம்பத்திலிருந்தே நாங்களும் அதேபோல உலக சுகாதார ஸ்தாபனமும் தெரிவித்து வந்த ஒருவிடயம் தான், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஒரேயொரு சிறந்த நடவடிக்கையாக பரிசோதனைகளை அதிரகரிப்பதாகும்.
பரிசோதனைகளின் ஊடாகவே தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். அரசாங்கத்திற்கு நிதிப்பற்றாக்குறை இல்லை. ஏனென்றால் வெளிநாடுகளிலிருந்து அதிகளவான நிதியுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே பரிசோதனைகளை அதிகரித்து இந்த ஆட்கொல்லி கொரோனா தொற்று மேலும் பரவாமலிருக்க நடவடிக்கையை எடுக்கும்படி கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.