அண்மைக்காலமாக வடக்கை ஆட்டிப்படைத்தது ஆவா எனப்பெயரிடப்பட்ட குழு. எனினும் கொள்ளைக் கூட்டம், முன்னாள் இராணுவம், விடுதலைப்புலிகள் எனவும் பல பெயர்களும் இவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த குழுக்களை அடக்க அடுத்தடுத்து கைதுகளும் இடம்பெற்றது இங்கு இவர்கள் கைது செய்யப்பட்டது என்னமோ பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் அடிப்படையிலேயே. இருந்தபோதும் கூட இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
சட்டத்தினை பதவியில் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க முடியும், அவர்களின் அனுமதி இருப்பின் விடுதலையும் கைதுகளும் நிகழும் என்பதனை இந்த ஆவாவினரின் விடுதலைகள் உறுதிப்படுத்தியது.
எனினும் அதே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இது வரையிலும் அழுத்தங்கள் காட்டப்படுவதில்லை.
இப்போதைய ஜனாதிபதியும் கூட வெளியில் ஒன்றும் உள்ளே ஒன்றுமாக சர்வதேசத்திடம் நற்பார்வையை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அண்மையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது,
ஒரு நாட்டிற்கு எதிரி எப்போதும் எதிரியல்ல, நண்பன் எப்போதும் நண்பனும் அல்ல என்ற கருத்துகளுக்கு அமைய ஒரு நாட்டை முன்னேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது எதிரிகளையும் நண்பர்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
ஆக கடந்தகாலம் இனி அவசியம் இல்லை எதிர்காலத்தினை அடிப்படையாக கொண்டே செயற்பட வேண்டும் இவை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பகிரங்கமாக தெரிவித்தவை.
மொத்தத்தில் இப்போதைய ஆட்சியாளர்களில் கருத்துபடி இனி நாட்டில் யுத்தம் இல்லை, புலிகள் இல்லை பயங்கரவாதமும் இல்லை எதிர்கால நல்லிணக்க நாடு மட்டுமே முக்கியம்.
அப்போது ஏன் இந்த அரசியல் கைதிகளுக்கு மட்டும் பாதுகாப்பு அமைச்சின் பார்வை திரும்பவில்லை? எதிரிகளாக பார்க்கப்படாத போது அரசு அவர்களின் விடுதலையில் கரிசனையினை ஏன் காட்டவில்லை என்பது ஜனாதிபதிக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
இது வரையிலும் என்ன குற்றம் என்பது கூட தெரியாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு விடை கொடுக்க ஜனாதிபதி துணிய வில்லை போல அப்படியாயின் இன்னும் நாட்டின் எதிரியாகவா அவர்களை ஜனாதிபதி பார்க்கின்றார்? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதே நேரம் அரசியல் கைதிகளில் மன்னிப்பு தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பதில் புதிதாக அமைக்கப்படும் சட்டத்தின் அடிப்படையிலேயே கவனத்தில் எடுக்கப்படும் என்ற ஒரு வகை பதிலும் கூறப்பட்டு வருகின்றது.
இங்கும் வேடிக்கைதான் அது எப்போது அமைக்கப்படும் என்பது இன்றுவரை தெரியாது.
அதே போல் பூதத்திடம் இருந்து தப்பித்து பிசாசிடம் மாட்டிக்கொள்ளும் கதைதான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மாற்றம் என்ற ஓர் கருத்தும் இருக்கத்தான் செய்கின்றது. அதாவது புதிய சட்டம் இப்போதைய சட்டத்தினை விடவும் பயங்கரமானதாகவே இருக்கும்.
அப்படியே மாற்றி அரசு எதிர்பார்க்கும் புதிய சட்டத்தினை கொண்டு வந்து அதில் உள்ள திருத்தங்களுக்கு அமைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனில்??
அதற்கு முன்னர் அவர்கள் இறந்துவிட்டால் அப்போது அவர்களின் குற்றம் என்ன? கொடுக்கப்பட்ட தண்டனை என்ன? இதற்கு பதில் யார் கொடுப்பார்கள் என்பது தெரியாது?
இது இப்படியிருக்கும் போது ஜனாதிபதி நண்பன் பற்றியும் எதிரி பற்றியும் குறிப்பிடுவதில் எந்தஅளவிற்கு உண்மைத்தன்மை உள்ளது என தென்னிலங்கை புத்திஜீவிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
எவ்வாறாயினும் இவ்வாறான கேள்விகளுக்கு அரசு வெளிப்படையான பதில்களை வழங்குமாயின் மட்டுமே சர்வதேச ரீதியிலான உண்மையான நற்பார்வை இலங்கை மீது விழும்.
அதனை விடுத்து போலியான வாக்குறுதிகளும் விராவேசப்பேச்சுகளும் எதிர்கால நல்லிணக்க நாட்டிற்கு பாதகத்தன்மையை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.