“விழிப்புணர்வில் ஏற்பட்ட தாமதமே பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று பிரான்சில் இருந்து மருத்துவர் கிருசாந்தி சக்தி தாசன் தெரிவித்துள்ளார்.
1995 இல் இலங்கையிலிருந்து வெளியேறி, பிரான்ஸில் மருத்துவத்துறையில் படித்து அங்கு மருத்துவராகப் பணியாற்றிவரும் அவர், பாரிஸில் கொரோனா தீவிரமாகப் பரவி பலரைப் பலியெடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். கொரோனா பரவல், அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை எம்முடன் பகிர்ந்தகொண்டார்.
அவர் வழங்கிய நேர்காணலின் முழுவடிவம்:
கேள்வி: பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் பரவல் தீவிரமடைய காரணம் என்ன?
பதில்: பிரான்ஸ் உட்பட பெரும்பாலான உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவத்துவதற்கான தயார் நிலையை கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. கொரோனா வைரஸ் இந்தளவிற்கு தீவிரமாக பரவி உயிர் இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதை எந்தவொரு நாடும்
மேலும் வைரஸ் குறித்து குறைவான மதிப்பீட்டை நாடுகள் கொண்டிருந்தனர். சீனாவின் ஆராய்ச்சி முடிவுகளின் படி கூடுதலான மரணம் முதியவர்களுக்கு தான் என்பதை வெளிப்படுத்தியது.
அதே நேரத்தில் இத்தாலியில் கொரோனா வைரஸ் தீவிரத்துடன் பரவத் தொடங்கிய பின்னர் தான் இளைஞர்களுக்கு மரணம் ஏற்படும் என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், இத்தாலிய மருத்துவர்களால் வையிரஸ் குறித்த பல உண்மைகளும் வெளியே வந்தது. வைரஸ் இத்தாலிய மக்களுக்கு பரவத் தொடங்கியபோது பிரான்ஸ் தன்னுடைய முழு உதவிகளையும் சீனாவிற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. இதுவும் பிரான்ஸ் சுகாதார நெருக்கடிகளை அதிகம் சந்திக்க காரணமாகியுள்ளது.
கேள்வி: கொரோனாவின் தாக்கத்துக்கு இதுவரையில் 24000 க்கும்அதிகமான மருத்துவ பணியாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் இதற்கு என்ன கரணம்?
பதில்: இதற்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். முதலில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விழிப்புணர்வு தாமதமாகத்தான் ஏற்பட்டது.
இதனால் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடை மற்றும் முககவசங்கள் உள்ளிட்டவை மிகவும் தாமதமாகத்தான் மருத்துவர்களிற்கு ஒப்படைக்கப்பட்டது.
இதனால் ஆரம்பத்தில் வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியபோது மருத்துவ பணியாளர்களிற்கு நோய் தீவிரமாக பற்றிக்கொண்டது.
இதைவிட சில நோயாளர்களிடம் வைரஸ் தொற்றி இருந்தாலும் அவர்களிடம் நோய் குறித்து எந்த அறிகுறியும் வெளிப்படவில்லை. இவ்வாறான நோயாளர்கள் மருத்துவர்களிடம் வரும்போது, அவர்களிடமிருந்து மருத்துவ பணி யாளர்களுக்கு நோய் பரவியுள்ளது.
இதைவிட வைரஸின் சுமையும் ஒரு முக்கியமான காரணி. அதாவது ஒருவரின் உடலில் வைரஸ் அதிகம் பரவியிருக்கும் போது, அவரிடமிருந்து இலகுவாக மருத்துவ பணியாளர்களுக்கும் அது பரவிவிடுகிறது.
இதேவேளை, மருத்துவ பணியாளர்களுக்கு ஏற்கனவே சில நோய் தாக்கங்கள் இருக்கும்போது இந்த வைரஸ் தொற்றும்போது அதுசில வேளைகளில் உயிர் ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது.
கேள்வி: கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் எவை ?
பதில்: இரண்டு விதமான சவால்கள் இருக்கின்றது. முதலில், நோயாளிகளை காப்பற்றுவது. அதேவேளை ஏனையவர்களுக்குபரவாமல் பாதுகாப்பது. தற்போது அதிகளவான நோயாளர்கள் தினமும் வருவதால் பராமரிப்பதும், சிகிச்சையளிப்பதும் மிகவும் சவாலாக உள்ளது.
அதே நேரத்தில், வந்த எல்லோரும் வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று விரும்பினாலும் பிரான்சில் பரிசோதனைக்கு மிகுந்த பற்றாக்குறை நிலவுவதால் அனைவரையும் பரிசோதிப்பது சாத்தியமில்லை.
இதனால் கடுமையாக உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் மருத்துவமனையில் வேலை செய்பவர்களுக்கும் மட்டும் தான் பரிசோதனை செய்ய முடியும்.
அதே நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் அனைவரையும் அனுமதிக்க இடம் போதாது என்பதால், சுயபாதுகாப்புடன் வீட்டில் தனித்திருந்து உடல் நிலையை கவனிக்கும்படி ஆலோசனைகள் வழங்குகின்றோம்.
சிலவேளைகளில், ஆறாம் எட்டாம் நாள் வந்து கடின பாதிப்புகள் வரலாம் என்பதற்காக அந்த நேரத்தில் கட்டாயம் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை கூறித் தான் அனுப்புகின்றோம்.
அதேவேளை கடுமையான நோய் தாக்கம் உள்ளவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளிக்கின்றோம். சிலர் தனியே வீட்டில் இருந்த நிலையில் இறந்துவிடுகின்றனர்.
இதெல்லாம் கவலைக்குரிய விடயம் தான் மேலும் மருத்துவரகளுக்கே முகக் கவசங்கள் பற்றாக்குறையாக உள்ளது. ஒவ்வொரு மருத்துவருக்கும் மருந்தகங்களில் முகக் கவசங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் கால இடைவெளியில் வழங்கப்படுகிறது.
வீடு திரும்பும்போது சில வேளைகளில் எங்களின் ஊடாக குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படாமலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதற்குரிய சுய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு பல்வேறு சவால்களை நாங்கள் தினமும் சந்திக்கிறோம்.
கேள்வி: கொரோனாவின் பரம்பலை கட்டுப்படுத்துவதில் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆரம்பத்தில் அக்கறைகொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதே?
பதில்: விமர்சனம் மட்டுமல்ல அதுதான் உண்மையும் கூட. பிரான்சில் பல்வேறு மருத்துவர்கள் அரசுக்கு எதிராக வழக்கு போட்டுள்ளனர். ஏனென்றால் அவர்களின் அறிவித்தலுக்கு பிறகும் கூட அந்த அரசு கொரோனாவை எதிர்த்து போராட தயாராகவில்லை.
அதனை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். இதனால் சுகாதார நெருக்கடி வரலாம் என்று அறிவித்துள்ளனர். முகக்கவசங்கள் தேவை என்றும் முன்பே கூறியிருந்தனர். அதனை பொருட்படுத்தாமல் இருந்தமையினால்தான் பிரான்சில் பல உயிர் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
பிரான்ஸ் மட்டுமல்ல பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கையான்ட முறையில் பல குறைபாடுகள் காணப்படுவதாக பிரான்ஸ் அரசின் தலைவர் தனது அண்மைய உரையில் குறிப்பிட்டுள்ளதோடு, இக் குறைபாடுகளை சரிசெய்வதற்குரிய நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கேள்வி: கொரோனாவுடன் போராடுவதால் மருத்துவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதா? நேரடியாக களத்தில் பணியாற்றும் மருத்துவராக உங்களின் மனப்பதிவு?
பதில்: தற்போதைய சூழ்நிலையில் மருத்துவத்துறை பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இடையில் நெருக்கடியான கால கட்டமாகவே உணர்கின்றேன்.
காரணம் அதிகளவான நோயாளர்கள் தினம்தோறும் மருத்துவமனையை நோக்கி வருவதால் மருத்துவத்துறை பணியாளர்கள் அதிக நேரம் பணிகளை கவனத்துடன் முன்னெடுக்கவேண்டியுள்ளது.
இதனால் குடும்பத்தில் நேரத்தை ஒதுக்குவதும் எமது தனிப்பட்ட கருமங்களை ஆற்றுவதும் மிகவும் சவாலாகவே உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவத் துறை பணியாளர்கள் மூலமாக அவர்களின் குடும்பத்தினருக்கு சிலவேளைகளில் பரவிவிடும் சூழ்நிலையும் உள்ளதால் குடும்பத்தில் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டியுள்ளது.
என்னைப் பொறுத்த அளவில் எந்தவிதமான பாதிப்பும் என்னுடைய குடும்பத்திற்கு வரவில்லை. இருந்தாலும் பணிச்சுமை காரணமாகவும் நேர நெருக்கடியால் சில சாவல்களை எதிர் கொள்கிறோம்.
இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களின் புரிந்துணர்வும் ஆதரவும் மருத்துவர்களுக்கு கிடைக்கும் போது பிரச்சனைகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் தற்போதையை நிலையில் இடைவெளி வந்து கட்டாயம் இருக்கத்தான் வேண்டும்.
இந்த நோயிலிருந்து நோயாளர்களை காப்பாறும் அதே வேளை எங்களையும் எங்களை சுற்றியுள்ள குடும்பத்தினரையும் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். இதனால் கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளவேண்டியது அவசியம்.
கேள்வி: பிரான்சில் அதிகளவில் தமிழர்கள் உயிரிழப்பதற்கு காரணம் என்ன?
பதில்: இதற்கு முக்கியமான காரணம், பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகள் தான் தற்போதைய இந்த நெருக்கடியான சூழலில் உத்தியோகத்தர்களும் உயர் பதவிகளில் இருப்பவர்களும் வீடுகளில் இருந்தே பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
ஆனால் பிரான்சில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் உணவகங்கள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுவர்களாகவே இருக்கின்றனர்.
இவ்வாறான பணிகளை வீட்டிலிந்து செய்ய முடியாது. கட்டாயமாக இதற்காக வெளியில் சென்றே ஆகவேண்டும்.
மேலும் இதன்போது பொதுப் போக்குவரத்துக்களைப் பயன்படுத்த வேண்டி ஏற்படுவதனாலும் இந்த பணிகளின் போது அதிகளவான மக்களை தினந்தோறும் சந்திக்கும் சூழ்நிலை காணப்படுவதாலும் நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றது.
இதைவிட பொருளாதார நெருக்கடியால் ஒரு வீட்டில் பலபேர் தங்கி வாழ்ந்து வருகின்றனர் இதுவும் நோய் தொற்றுவதற்கான ஒரு காரணமாக அமைகின்றது .
அதேநேரத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதயப் பிரச்சினை, நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சுவாசப் பிரச்சினை போன்ற பலவேறு நோய்கள் இருப்பவர்கள் அதற்காக ஏற்கனவே சிகிச்சைகளையும் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அதிகமான உடல்பருமன் உடையவர்கள் போன்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகுறைந்தளவிலையே காணப்படும் இவ்வாறானவர்களுக்கு அதிகமான பாதிப்புக்கள் ஏற்படலாம்.
இதனால் மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றது. இவ்வாறான நோய்கள் எங்களுடைய மக்களுக்கு அதிகமாக காணப்படுவதும் ஒரு காரணமாக அமைகின்றது.
கேள்வி: கொரோனாவின் ஆதிக்கத்திலிருந்து மனிதகுலம் எப்போது பாதுகாப்பு பெற முடியும்?
இந்த வைரசின் தன்மை குறித்த ஆய்வுகள் இன்னமும் நிறைவுபெறவில்லை. இருந்தாலும் ஆராய்ச்சிகளின் மதிப்பின்படி 60 வீதமான மக்களுக்கு இந்த வைரஸ் தொற்று நோய் பரவும் ஒருவேளை குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் இந்த நோய் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறமுடியும். அதுவரை உலக சுகாதார நிறுவனமும், அரசுகளும், மருத்துவர்களும் கூறும் அறிவுறுத்தல்களை ஏற்று மக்கள் சுயபாதுகாப்புடன் இருப்பது அவசியமாகும்.