சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு… சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு… என்று விடாமுயற்சியை தன் படங்களில் மட்டுமல்லாது, தன் நிஜவாழ்விலும் சாதித்து காட்டியுள்ள சூப்பர்ஸ்டாருக்கு இன்று பிறந்தநாள். இத்தருணத்தில் அவரது பிறப்பு முதல் தற்போது வரை அவர் சென்ற முக்கியமான இடங்களை இப்பதிவில் காண்போம்.
வானி விலாஸ் மருத்துவமனை, பெங்களூரு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரு மாநகரின் கிருஷ்ணராஜேந்திரா சாலையில் அமைந்துள்ள வானிவிலாஸ் மருத்துவமனையில் டிசம்பர் 12, 1950, அன்று பிறந்தார். ராமோஜி ராவ் – ஜிஜாபாய் தம்பதிகளுக்கு மகனாக ரஜினிகாந்த் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரிக்கு பிறகு நான்காவது பிள்ளையாகப் பிறந்தார்.
ஆச்சார்யா பாதசாலா, பெங்களூரு
ரஜினி பெங்களூருவில் உள்ள ஆச்சார்யா பாதசாலா பள்ளியில்தான் தன்னுடைய பள்ளிப்படிப்பை நிறைவு செய்துள்ளார். பள்ளி நேரம் போக டிராமாக்களிலும் தோன்றுவதில் ஆர்வம் காட்டியுள்ளார் இந்த எவர்கிரீன் எந்திரன்.
ரஜினி பெங்களூரு நகர தெருக்களில் கூலியாக
1970களின் முற்பாதியில் தினக்கூலியாக வேலை பார்த்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். எளிமையின் சிகரமான கடினப்பட்டு தன் வாழ்வில் முன்னேறியுள்ளார் என்றால் அதுமிகையாகாது. அன்று முதல் இன்று வரை தன் வாழ்வில் அந்த எளிமையை கடைபிடித்து வருகிறார் தலைவர்.
கேஆர் மார்க்கெட்டில் கண்டக்டர் அவதாரம்
பின்னர் கர்நாடக அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கேஆர் மார்க்கெட் மார்க்கத்தில் தான் சூப்பர்ஸ்டார் நடத்துனராக பணியாற்றியுள்ளார். எவருக்கும் இல்லாத வேகம். அப்படி ஒரு ஸ்டைல் என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இருக்காதா பின்ன… ஸ்டைல் அவரது ரத்தத்தில் ஊறியிருக்கிறதே..
கோலிவுட் என்ட்ரி
1975ல் சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடித்து அறிமுகமாகி இன்று எவரெஸ்ட் அளவுக்கு மிகப்பெரிய புகழ் சிகரத்தை அடைந்துள்ளார் தலைவர். 1975ம் ஆண்டு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தில் அறிமுகமானார்.
திருப்பதியில் திருப்பமான ரஜினி வாழ்க்கை
1981ம் ஆண்டு ரஜினிகாந்த், லதாவை மணந்தார். அதிகாலையில் திருப்பதி கோவிலில் இந்த திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவ்வப்போது ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு சென்றுவிடுவார் என்கின்றனர் நெருக்கமானவர்கள்.
பாலிவுட் என்ட்ரி
1983ம் ஆண்டு தனது முதல் ஹிந்தி படமான அந்த கனூனின் அமிதாப்புடன் நடித்திருந்தார் ரஜினி. அறிமுகப்படம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அமிதாப்புக்கு சரிசமமான நடிப்பை உதிர்த்து பாலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.
ஹாலிவுட் என்ட்ரி
உலகத்தரம் என்று வியக்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட்டில் விருந்தளித்தார் தலைவர். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கேற்ப தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,கன்னடா என தொடர்ந்த தலைவரின் வெற்றி பின்னாளில் ஹாலிவுட்டிலும் எதிரொளித்தது. பிளட்ஸ்டோன் எனும் படத்தில் 1988ம் ஆண்டு நடித்தார் சூப்பர்ஸ்டார்.
ஹாலிவுட்டில் தமிழ்படம்
சூப்பர்ஸ்டாருக்கு மாபெரும் வெற்றியை தந்த படங்களில் தலையாய படம் என்றால் எந்திரன் படத்தைக் கூறலாம். மிகுந்த பொருட்செலவில் அதிக மெனக்கெட்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் பெரும்பாலான பணிகள் ஹாலிவுட்டில் நடைபெற்றது. இப்படத்தின் வெற்றி தலைவர், ஏ.ஆர்.ஆர், ஷங்கர் கூட்டணி மாபெரும் வெற்றிக்கூட்டணி என்பதை மறுபடியும் நிரூபித்தது.
பாபா குகை, இமயமலை
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரஜினிகாந்த், சுவாமி ராகவேந்தரின் பக்தராக அறியப்படுகிறார். மேலும் பாபா மீது அதிக பற்று கொண்டு அடிக்கடி இமயமலை பாபா குகைக்கு சென்று தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.
கமல்ஹாசன் இல்லம், ஆழ்வார்ப்பேட்டை
தனது நீண்டகால நண்பரும், இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவருமான கமல்ஹாசன் மாடிப்படியிலிருந்து தவறிவிழுந்து அடிபட்டதைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார் சூப்பர்ஸ்டார். நீண்ட நாள்களுக்குப் பின் நடைபெற்ற சந்திப்பு என்பதாலும், மாபெரும் நட்சத்திரங்கள் என்பதாலும் இந்த சந்திப்பு அதிகம் பேசப்பட்டது.
ராஜாஜி ஹால், சென்னை
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் ரஜினி கலந்துகொண்டார். சென்னை ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உடலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார் சூப்பர்ஸ்டார். தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் சென்றிருந்தார் ரஜினிகாந்த்.