எதற்கெடுத்தாலும் அழுகை, காதலன் விட்டு போய்ட்டான், மனைவி என்னை விட்டு ஓடிவிட்டாள், ஆபீசர் என்னை திட்டிவிட்டார். பரீட்சையில் நான் பெயில் ஆகிவிட்டேன் என்று ஒவ்வொருவருக்கும் ஒருவித மனபதட்டமும், மன உளைச்சலும் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்காக நம்மை நாமே அழித்துக் கொள்வதற்காக இல்லை. எதையும் தாங்கும் சக்தி நமக்கு வர வேண்டும். நமக்கு யாரும் இல்லையே என்ற எண்ணம் ஒருவருக்கு வரும்போதுதான் அது மனஉளைச்சலாக மாறுகிறது.
வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை எதிர்த்து சமாளிக்கும் மனப்பக்குவத்தை நாம் மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். என்றைக்குமே தற்கொலை ஒரு மனிதனுக்கு முடிவு ஆகாது. பிரச்சினைகளை சமாளிக்க பல வழிகள் இருக்கிறது. அதை நாம் தான் தேடி செல்ல வேண்டும்.
கஷ்டத்தில் யாரும் உதவி செய்ய வில்லையே என்று எண்ணி மனம் சோர்ந்து போகாதீர்கள். நிதானமாக இருந்தால் அனைத்தும் பனிபோல் உருகி மறைந்து போகும்.
இந்த உலகில் சராசரியாக ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலைகள் நிகழ்கின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு 40 நொடிகளில் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழக்கின்றோம்.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தூக்கமின்மை, அழுகை, மன உளைச்சல், அலுவலகத்தில் கவனக்குறைவு போன்ற மனஅழுத்தத்தின் இதர அறிகுறிகள் கொண்ட ஒருவரை விட்டுவைக்கவில்லை. ‘நான் எல்லோருக்கும் பாரமாகி விட்டோம்” என்று ஒருவருக்கு தோன்றிய எண்ணம், ‘நான் இனிமேல் இந்த உலகத்தில் வாழக்கூடாது” என்ற தற்கொலை எண்ணமாக மாறுகிறது. அதன் விளைவுதான், மாத்திரை சாப்பிட்டோ அல்லது தூக்கில் தொங்கியோ தன்னை எரித்துக்கொண்டோ தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நடப்பது போல தோன்றினாலும், உண்மை அது கிடையாது. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் இருக்கின்றன.
மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாக அமைகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை பலர் தேடுகின்றனர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கு அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்துகளும் இருக்கிறது. இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகமாக காணப்படுகிறது.
15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதை உளவியல் ரீதியாக ‘Resilience’ என்கிறோம். ஒரு பந்தை தரையில் தட்டினால், அது மீண்டும் மேலே எழுவது போல் நாம் ஒவ்வொருவர் உள்ளிலும் சவால்களை சமாளிக்கும் தன்மை புதைந்து கிடக்கிறது. அதை தட்டி எழுப்ப வேண்டும்.
சந்தோஷமான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நாம், நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும் மற்றவர்களிடம் பகிர மறுக்கிறோம். நான் அழுதால் சாய்வதற்கு தோளும் இல்லை. என் பிரச்சனைகளை கேட்பதற்கு யாரும் இல்லை. என்று ஒருவருடைய வாழ்வை கேள்விகுறியாக்கும் சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றது.
தன் குழந்தைகளுக்கு இல்லை என்ற சொல்லே இருக்கக் கூடாது என்று பார்த்து, பார்த்து வளர்க்கும் பெற்றோர்கள், அவர்களுக்கு எதிர்காலத்தில் சமூகத்தால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை பழக்கப்படுத்த மறந்து விடுகிறார்கள்.
தகாத உறவுமுறை, போதை பழக்கம், வேலையின்மை என சமூகத்தை அச்சுறுத்தும் எல்லா விஷயங்களும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றது. உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றோடு ஒன்று இணையும் போது, ஒரு நபர் தற்கொலை முயற்சி செய்வதற்கான ஆபத்து பன்மடங்கு உயர்கின்றது.
மனம் பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்திற்கு தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே.
இதற்கு முதல்படி, தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள்.
உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி அறிந்து கொள்ளுங்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலாகும். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு அதிகம் இருக்கிறது.தற்கொலை எண்ணம் ஒருவருக்கு வந்தால் தயங்காமல் உங்களுக்கு பிடித்த நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.
நிறைய மனதிற்கு நேர்மறை சிந்தனை கொடுக்கும் பாடல்களை கேளுங்கள். பழைய பாடல்களில் ஒவ்வொரு வரியிலும் பல அர்த்தங்கள் புதைந்து இருக்கும்.
நிறைய தத்துவமுள்ள பாடல்களை கேட்கும்போது உங்களுடைய பிரச்சினை சிறிய கடுகு போல உங்களுக்கு தெரியும்.
வாழ்க்கை வாழ்வதற்காக மட்டுமே! நம்மை விட மனதில் பலசாலி யாரும் இந்த உலகத்தில் இல்லை என்ற எண்ணம் யாருக்கெல்லாம் ஏற்படுகிறதோ அவர்கள் என்றைக்குமே சாதனையாளர்கள்தான்.