தமிழகத்தில் இளம் பெண்களிடம் ஆபாச படம் எடுத்து மிரட்டிய காசி என்ற இளைஞன், அப்பணத்தை கந்துவட்டிக்கு கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
நாகர்கோவில், கணேசபுரம் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி(26). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தால் மிரட்டியதுடன், 6 லட்சத்திற்கு மேல் தன்னிடம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இவரைத் தொடர்ந்து அதே சென்னையை சேர்ந்த விமானப் பணிப் பெண் ஒருவரும், இவர் மீது புகார் கொடுக்க, தற்போது காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் நாகர்கோவில், அலெக்சாந்திரா பிரஸ் ரோட்டை சேர்ந்த வேலண்டைன் மோரீஸ் மகன் டிராவிட்(28) என்பவர் வடசேரி காவல்நிலையத்தில், புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நானும், காசியும் நண்பர்கள். காசியிடம் கடந்த 2018 ஜூன் 6-ஆம் திகதி 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். அதற்கு ஈடாக காசோலை மற்றும் எனது விலை உயர்ந்த பைக் (ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750) ஒன்றையும் கொடுத்தேன்.
பின்னர் வட்டி மற்றும் அசலை கொடுத்துவிட்டேன். ஆனால் காசோலை மற்றும் பைக் ஆகியவற்றை காசி திருப்பி தரவில்லை. பைக்கின் ஆர்.சி புத்தகத்தை தனது பெயருக்கு மாற்றி என்னிடம் நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வடசேரி பொலிசார், மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் காசி மீது ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காசி மீது இதுவரை 2 பெண்கள் உட்பட மூன்று பேர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து 94981 11103 என்ற செல்போன் எண் அறிவிக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்,
அவர்கள் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும், ஆன்லைனில் புகார் அளித்தால் போதும் என்றும் பொலிசார் கூறி வருகின்றனர்.