வெனிசூலா சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் கராகசில் இருந்து 450 கி.மீ தொலைவில் உள்ள குவானாரேயில் அமைந்துள்ள லாஸ் லானோஸ் சிறையில் நேற்று முன்தினம் கைதிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உணவு வழங்க தங்களின் உறவினர்களை சிறைக்குள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கைதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதியாக தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. கைதிகள் சிறைக்காவலர்களையும், அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு கலவரம் மூண்டது. சிறைச்சாலை பொறுப்பதிகாரியும் சுடப்பட்டதாக சிறைச்சாலைகளிற்கு பொறுப்பான அமைச்சர் ஐரிஷ் வரேலா தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கலவர தடுப்பு பொலிசாரும், பாதுகாப்பு படைவீரர்களும் சிறைக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் கைதிகள் மற்றும் சிறைக்காவலர்கள் உள்பட 46 பேர் கொல்லப்பட்டனர். 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஒருகாலத்தில் பணக்கார நாடாக இருந்த எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில், ஒருபுறம் அரசியல் குழப்பமும், மறுபுறம் பொருளாதார நெருக்கடியும் நீடிக்கிறது. அந்த நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 110,000 கைதிகளை தாங்கும் இடவசதிகளே சிறைச்சாலைகளில் இருந்தாலும், அளவிற்கதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புக்களும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.