நாடாளுமன்ற தேர்தலிற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியானவையா என்ற விளக்கத்தை சட்டமா அதிபரிடம், தேர்தல்கள் திணைக்களம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிற்குமிடையில் நேற்று (2) நடந்த கலந்துரையாடலில், வேட்புமனுக்களின் செல்லுபடி தன்மை குறித்த சர்ச்சை எழுந்ததை நேற்று தமிழ்பக்கம் குறிப்பிட்டிருந்தது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இறுதி நாட்களான 17,18,19ஆம் திகதிகளை பொதுவிடுமுறையாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் பிரகடனப்படுத்தியிருந்தார். விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படலாமா என்பதே இப்பொழுது சட்ட விவகாரமாகியுள்ளது.
இதையடுத்தே, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வேட்புமனுவின் சட்டபூர்வ தன்மை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திராததால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அப்பிராயத்தை நாட முடிவு செய்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1981ஆம் இலக்க தேர்தல் சட்டத்தில், அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வேட்புமனுவை கையளிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.