உலகையே கதிகலங்கச் செய்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் இனம், மதம், மொழி கடந்து இதுவரையில் பல நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை அச்சுறுத்தி மரணத்தின் விளிம்புக்கு கொண்டு சென்றிருக்கின்றது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடா நாடுகளைப் பொருத்தவரையில் அதி உச்ச அளவில் இந்த வைரசின் தாக்கம் மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தற்போது நடைபெற்று வரும் நூற்றாண்டு விஞ்ஞான யுகம் என்று கூறினாலும் அதனையும் தாண்டி மக்களை பதம் பார்க்கும் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாக இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆக்கிரமிப்பது விந்தையாக இருக்கின்றது.
இன்று உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் இந்த வைரஸின் தாக்கம் காரணமாக இழப்புக்களை சந்தித்த வண்ணமே உள்ளனர்.
தற்காலத்தில் குடும்பத்தின் தேவை அறிந்து உலக ஓட்டத்திற்கு ஏற்ப புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வைரஸின் தாக்குதலுக்கு தங்களை சமாளித்து கொண்டும் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதித்தும் தொழில் புரிந்து கொண்டு வருகின்றனர்.
கண்ணுக்குப் புலப்படாத வைரசின் தாக்கம் காரணமாக ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் ஏன் கணவன் மனைவி இருவரும் இறப்புக்களை சந்தித்த வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டிலும் இந்த கண்ணுக்குப் புலப்படாத வைரசின் தாக்கம் வயது, இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாலும் மனிதர்களை விட்டு வைக்கவில்லை.
ஏறக்குறைய இரண்டு மாதங்களாக இந்த உள்ளிருப்பு காலத்தில் வைரஸின் தாக்கம் என்பது தொடர்கதையாகவே சென்று கொண்டிருக்கின்றது.
இதே வேளை பிரான்ஸில் வீசா இன்றி வாழும் தமிழர்கள் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நாடு முழுவதும் எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை கொரோனா தடுப்பு உள்ளிருப்பு நிலை நீடிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில், வழமையான நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ள நிலையில், முக்கிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள், இதற்கான விசேட அனுமதிப் படிவத்தை பூர்த்தி செய்து தமது அடையாள ஆவணத்துடன் வீட்டுக்கு வெளியே செல்வது நடைமுறையில் உள்ளது
இந்நிலையில் பிரான்சில் வசித்து வரும் வதிவிட உரிமையற்ற வெளிநாட்டவர்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இதில் பெருமளவில் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர். உள்ளிருப்பு நிலைக்கு முந்திய காலத்தில், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், விடுதிகளில் பகுதி நேர தொழில் புரிந்து தமக்கான வாழ்வாதாரத்தைத் தேடிக் கொண்டிருந்த இவர்கள் தற்போது மாதக்கணக்காக வீடுகளுக்குள் முடங்கிப் போயுள்ளனர்.
பாரிஸ் உள்ளடங்கிய இல்-து-பிரான்ஸ் (Île de France) மாகாணத்தில், ஒரு நபர் தங்கியிருப்பதற்கான மாத வாடகையாக 250 யூரோக்கள் தொடக்கம் 350 யூரோக்கள் வரை செலுத்த வேண்டியுள்ளது. தொழில் வாய்ப்புக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பலர் தமது குடியிருப்புக்கான வாடகைப் பணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
அத்துடன் பலர் வீசா இல்லாமல் வேலை செய்திருந்த நிலையில் அரசினால் அறிவிக்கப்பட்ட சலுகைகளும் கிடைக்கவில்லை. சிலர் இந்நாட்டில் உறவினர்கள் எவரும் இன்றி தனித்தே வாழ்ந்து வருகின்றமையினால் தற்போதைய நெருக்கடி நிலையில் அவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
இவர்களில் பலர் தமக்கான உணவைப் பெற்றுக் கொள்வதில் கூட சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இப்படியான நிலைமையில் இங்கு சிக்கியுள்ளவர்களின் உதவிக் கோரிக்கைகள், இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்த நிலைமையின் வீரியத்தைப் புரிந்து கொண்ட சில தமிழ் அமைப்புகள், தன்னார்வ உதவி புரியும் குழுக்கள் மற்றும் தனிநபர்கள், இப்படியான தேவையுடையவர்களை தேடிச்சென்று உதவிகளை வழங்குவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
பிரான்ஸ் நாடு, மனிதாபிமானத்தின் அடிப்படையில் இயங்கும் தேசம். இங்கு கைவிடப்பட்டவர்கள், மற்றும் ஏழைகளுக்கு சேவை செய்யும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் சேவைகளை பெற்றுக் கொள்வதில், மொழிவழி தொடர்பாடல் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
ஏனெனில், இந்நாட்டிற்கு புதிதாக வந்தவர்களால் பிரெஞ்சு மொழியை பேசுவதோ, புரிந்து கொள்வதோ இலகுவான விடயமல்ல. ஆகவே, பிரான்சை நீண்ட காலமாக வதிவிடமாகக் கொண்ட தமிழர்கள் சேவை அடிப்படையில் இந்நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக் கொள்வதில் துணை நிற்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான உதவிகளை தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கும் தமது உறவுகளுக்கு உரியவர்கள் உதவி செய்ய முன்வரும் பட்சத்தில் அவர்கள் நிம்மதியான வாழ்வினை வாழ்வதற்கு வழி சமைத்துக் கொடுக்க முடியும் என்பது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.