காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இடம்பெற்ற மோதலில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் உட்பட ஐவர் பலியாகியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த படைவீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தேசத்திற்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காஷ்மீரின் வடபகுதியிலுள்ள ஹந்த்வாரா சங்கிமுல்லா பிரதேசத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ள அதேவேளை மேஜர் மற்றும் கேணல் தர அதிகாரிகள் உட்பட ஐந்து பாதுகாப்பு படையினரும் பலியாகியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டுவிட்டரில் இரங்கல் பதிவொன்றை வெளியிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஹந்த்வாராவில் வீர மரணம் அடைந்த வீரமிக்க எமது வீரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.
அவர்கள் நாட்டு மக்களை பாதுகாக்க ஓய்வின்றி உழைத்தனர் எனவும் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.