உண்மையில் சுவிட்ஸர்லாந்திற்கு தலைநகர் என்பது கிடையாது. 28. 11. 1848ம் ஆண்டு சுவிசின்புதிய அரசியல் யாப்பிற்கு அமைய சுவிசின் இருப்பு எங்கு எனும் வாதத்தில் பேர்ன் நகரில் நாடாளுமன்றத்தினை அமைத்துக்கொள்ளலாம் எனும் இணக்கம் காணப்பட்டது.
பேர்ன் நகரை தலைநகராக அப்போதைய மாநில மற்றும் தேசிய சபைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பேர்ன் நகரில் சுவிசின் நாடாளுமன்றம் உள்ளது என்பதே சரியாகும்.
கூட்டாச்சியாக நடைபெறும் ஆட்சி முறையில் அதிகாரப்பரவல், நேரடிக் குடியாட்சி என்பன சுவிசின் அரசியல் சிறப்பாகும். ஏப்பிரல் 2ம் திகதி 1902ம்ஆண்டு இப்போதைய நாடாளுமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை சுவிசின் நாடாளுமன்றம் இரண்டு பெரும் உலகப்போர் காலத்திலும், இயற்கைப் பேரிடர் காலத்திலும், அல்லது இதற்கு முன் இருந்த பெருந்தொற்றுநோய் காலத்திலும்கூட வெளியிடத்தில் கூடியதில்லை.
பேர்ன் நகிரில் “பேயா (Bea)” பெருவளாகத்தில் சுவிஸ் நாடாளுமன்றம்
கடந்த இரண்டு நூறு ஆண்டுகள் காணாதசூழலில் சுவிட்ஸர்லாந்தின் 2020 மே மாத ஒன்றுகூடல் 04.05.2020 முதல் 07.05.2020 வரை நாடாளுமன்றக் கட்டடத்தில் அல்லாது வெளியில் பெரும்பொருட்காட்சி நடைபெறும் பேர்ன் “பேயா” எனும் பெருவளாகத்தில் கூடியுள்ளது.
மாநிலங்களின் நலனைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு முழு மாநிலத்திற்கு 2 உறுப்பினர்கள் என 46 உறுப்பினர்களும் (மாநிலங்கள் சபை (Ständerat), 30 ஆயிரம் மக்களுக்கு ஒரு மக்கள் பிரதிநிதி என 200 உறுப்பினர்களும் (தேசிய சபை Nationalrat) ஒன்றாகக் கூடுவதே சுவிசின் நாடாளுமன்றம் ஆகும்.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 16.03.2020 முதல் சுவிட்ஸர்லாந்து அரசு அவசரகால சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது, சூழலிற்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை இறுக்கி வந்தது.
மக்கள் ஒன்று கூடுவதற்கு தடையும், இரண்டு மீற்றர் இடைவெளி விட வேண்டும் எனும் சுகாதாரா நடவடிக்கையும், மேலும் பல் பாதுகாப்பு விதிகளையும் சுவிஸ் அரசு அமுல்ப்படுத்தியது.
28.04.2020 மற்றும் 11. 05.2020 முதல் தளர்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒன்று கூடுவதற்கு தடை என்பது நடைமுறையில் உள்ளது.
ஆகவே சுவிஸ் நாடாளுமன்றம் வழமைபோல் கூடுவதற்கு 2 மீற்றர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனும் விதி தடையாக இருந்தது.
எனவே வழமைக்கு மாறாக நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து வெளியேறி பேயா பெருவளாகத்தில் இருசபைகளும் கூடுகின்றன.
04. 05.20 தொடங்கியது நாடாளுமன்றக் கூட்டத்தொடர்
வழமைக்கு புறம்பான எனத் தலைப்புக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுவிஸ் நாடாளுமன்றத்தில் நடந்திருக்கின்றது. ஆனால் இந்தாண்டு இப்போது நடைபெறும் இக்கூட்டத்திற்கு இது பொருத்தமான பெயராக மாறியுள்ளது.
வரலாற்றில் எப்போதும் இத்தனை கோடி சுவிஸ் பிராங்குகள் ஒரு கூட்டத்தொடரில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில்லை.
கிட்டத்தட்ட 60 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை சுவிஸ் நாடாளுமன்றம் கொரோனா பேரிடர் காப்பிற்கும், பொருளாதார சுழற்சிக்காகவும் வரவு செலவில் ஒப்புதல் அளிக்க வேண்டி உள்ளது.
நிதி அமைச்சராக இருப்பவர் சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஊவெலி மௌறெர் ஆவார். இவருக்கு முன்னர் எந்த நிதி அமைச்சரும் சுவிசின் வரலாற்றில் இப்பெருந்தொகையில் Budget தாக்கல் செய்ததும் இல்லை என்ற வரலாற்றுப் பதிவாக இக்கூட்டத் தொடர் அமைகின்றது.
அதே நேரம் சுவிசின் நன்கு அறியப்பட்ட இவரது சுவிஸ் மக்கள் கட்சி (வலதுசாரிக்கட்சி), பணிநேரம் குறைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சுவிஸ் அரசு அளிக்கும் மானிய ஈட்டினைக் குறைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த மௌறெர் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக நாட்டின் நலனைக் காக்க இயங்க வேண்டிய சூழலில் உள்ளார்.
தேசிய சபையின் இவ்வாண்டிற்கான தலைவி ஈசாபெல் மோறே சுவிஸ் நாடாளுமன்றக்கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது பேசிய இவர் “இக்கூட்டத்தொடர் சுவிட்ஸர்லாந்தின் வரலாற்றில் பதியப்படும், வழமைக்கு மாறான இக்கூட்டத் தொடரை வழமைக்குப் புறம்பான காலத்தில் கூட்டுகின்றோம்” என்றார்.
இந்நோய்த் தொற்றுப் பேரிடர் காரணமாக உறவுகளை இழந்தவர்களுக்கு தமது இரங்கலையும் , நோயின் தீவிரத்தால் அல்லலுறுவோற்கு தமது ஆறுதலையும் சுவிஸ் நாடாளுமன்றத்தின் சார்பில் மோறே நவின்றார்.
ஒரு குறுகிய நேரம்அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் இக்கடின சூழலில் பேரிடரிற்கு எதிராக உழைப்போருக்கும், இறந்தவர்களைக் கவனிப்போருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து இவர் தம் பணிகளைத்தாம் மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார் மோறே.
கடந்த 28. 02. 2020 அவசரகால சட்டத்தினை நோய்த் தொற்றுப் பேரிடர் காரணமாக நடுவன் அரசு அறிவித்து பெருந்தொகையில் கடன்களையும் வழங்க முன்வந்திருந்தது.
ஆனால் சுவிட்ஸர்லாந்தின் அரசியல் யாப்பிற்கமைய இச்சட்டத்தை மட்டும் கொண்டு நடுவன் அரசு நாடாளுமன்றத்தின் ஒப்புதல்பெறாது பெருந்தொகைகளைக் கடனாக அளிக்க முடியாது.
அறிவிக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கடன்களுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவேண்டும். இக்கூட்டத்தொடரில் இவை கையாளப்படும் என்றார் மோறே.
04. 05. 2020 திங்கள் கூடியுள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தில் பல விடயங்கள் கையாளப்பட்டாலும் வழமையான கூட்டத் தொடராக இது அமையாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இருக்கைகள் பெயரிடப்பட்டு நாடாளுமன்றத்தில் இருப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் பேசும்போது எழுந்து வந்து அனைவருக்கும் பொதுவாக பொருத்தப்பட்டிருக்கும் ஒரே ஒலிவாங்கியில் பேசவேண்டி இருந்தது.
வழமையாக நாடாளுமன்றத்தில் உணவகம் பல் வகை உணவுகளுடன் அமைந்திருக்கும். ஆனால் இம்முறை சிற்றுண்டி மட்டும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து பெறக்கூடிய வாய்ப்பிருந்தது.
அதுபோல் வழமையான ஓய்வு இடைவேளை அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ப ஓய்வுகளை எடுத்துக்கொண்டு கூட்டத்தொடரில் தொய்வின்றி பங்கெடுக்க அழைக்கப்பட்டிருந்தனர்.
வழமையாக ஒவ்வொரு தீர்மானம் மற்றும் ஒப்புதல்கள் அளிக்கும்போது சபை உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கு கணனித்திரையில் காண்பிக்கப்படும்.
இதற்குப் பதில் உறுப்பினர் ஆம் இல்லை எனும் பதிலுக்கு எழுந்து நின்று சமிக்கை காட்ட கேட்கப்பட்டது. இக்கூட்டத்தின் முழுமையான பெறுபேறு 07. 05. 2020 வியாழன் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கலாம்.