ஸ்ரீலங்கா படையினருக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கு அரசாங்கமே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கு முன் பல்வேறு வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் வழங்கியிருந்தாலும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்படை மற்றும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 200ஐ கடந்து செல்கின்றது.
நேற்றைய தினமும் 31 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸினை ஒழிக்கும் தீவிர முயற்சிகளில் சுகதரத்துறையினருக்கு மிகவும் பக்கபலமாக பாதுகாப்பு படையினரே திகழ்கின்றனர். இப்போது அவர்களும் இந்த வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர். காரணம் அப்படியான கொடூர ஆட்கொல்லி வைரசை ஒழிக்கும் படையினர் மற்றும் சுகாதார தரப்புக்கு தேவையான பாதுகாப்பு அங்கிகளும் உபகரணங்களும் அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்படாமையே.
ஆகவே அவர்களுக்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் சீருடைகளை அரசாங்கம் விரைந்து வழங்க வேண்டும். அதேபோல, கொழும்பு புறக்கோட்டையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போராட்டங்களை நடத்திய அங்கவீனமுற்ற படையினரிடம் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் சென்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே அந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.