இந்தி நகைச்சுவை நடிகரும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் சர்மா மும்பை கோரேகாவில் வசித்து வருகிறார். மும்பை அந்தேரி மேற்கு எஸ்.வி.பி. நகரில் இவரது பங்களா வீடு, அலுவலகம் உள்ளது. இந்த பங்களா வீடு கட்டும்போது மாநகராட்சியிடம் உரிய அனுமதி இன்றி, சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டது தெரியவந்தது. மேலும் கட்டுமான பணிகளுக்காக அவர் சட்டவிரோதமாக சதுப்பு நிலக்காட்டை அழித்து இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து கபில் சர்மாவுக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பியது. இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதில் அளிக்கும்படி மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி மாநகராட்சி தரப்பில் ஐகோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கபில் சர்மா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் கபில் சர்மாவுக்கு எதிராக ஆபாசிங் என்ற வக்கீல் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், சதுப்பு நில பகுதியில் உள்ள மான்குரோவ் செடிகளை அழித்து, அவர் பங்களா வீட்டை கட்டி உள்ளதாகவும், மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை செய்ததாகவும் தெரிவித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தபோது, சுற்றுச்சூழலுக்கு நடிகர் கபில் சர்மா தீங்கு ஏற்படுத்தி உள்ளதாக கூறிய ஐகோர்ட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வெர்சோவா போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் உத்தரவின்பேரில் வெர்சோவா போலீசார் நடிகர் கபில் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.