தமிழகத்தில் சிறுவர்,சிறுமிகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததுடன், ஆபாச வீடியோகளை வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பகிர்ந்து இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வளையபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் சிறார்களின் ஆபாச படங்களை இணைய தளங்களில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்து வருவது சென்னை சைபர் கிரைம் பொலிசாருக்கு தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் கருமத்தம்பட்டி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை வளையபாளையம் வீட்டில் இருந்த ரங்கநாதனை பொலிசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறார் ஆபாசபடங்களை பதிவேற்றம் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பகிர்ந்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. வாட்ஸ் அப் குழுக்களை வைத்து அதில் ஆபாச படங்களை பகிர்ந்து வந்து இருப்பதும் தெரியவந்தது.
மேலும் பேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி அதிலும் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்பபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் , ரங்கநாதனை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதோடு வாட்ஸ் அப் குழுக்களில் உறுப்பினராக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் அவர்கள் இந்த ஆபாச வீடியோக்களை வேறு யாருக்கெல்லாம் பகிர்ந்து இருக்கின்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.