கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இன்று இரவு 9.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் மட்டும் 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் கடற்படை வீரர்கள் எனவும் மற்றையவர் கடற்படை தம்பதியினரின் 13 மாதா குழந்தை எனவும் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.
அதன்படி இன்று இரவு 9.00 மணியாகும் போது நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்திருந்தது.
இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 373 பேர் கடற்படை வீரர்களாவர். அத்துடன் கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்த 28 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அரைவாசிப் பேர் கடற்படையினரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் ஆவர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படையினரில் 12 பேர் இதுவரை பூரண சுகம் பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.
இந் நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றின் பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் மேலும் 563 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் மேலும் 134 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குகின்ரனர்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 41 பேரும், உள் நாட்டிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட 65 பேரும் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
யாழ்ப்பாணம் – பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
இதனைவிட முப்படைகளைச் சேர்ந்த 384 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 373 பேர் வெலிசறை மற்றும் ரங்கல கடற்படை முகாம்களைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, கொழும்பில் இதுவரை 150 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நகருக்குள் மிக செறிவாக மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புக்கள், தோட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந் நிலையில் நேற்று அதன் ஒரு கட்டமாக , தெமட்டகொடை பகுதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத போதும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.