சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் ஒரு கிராமத்தில் அடுத்த ஓராண்டு காலம் கைப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவஸ்தையை சந்திக்க உள்ளனர்.
பெர்ன் மண்டலத்தில் அமைந்துள்ள Schüpfen கிராமத்திலேயே கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் கைப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் கைப்பேசி சேவை நிறுவனம் குறித்த தகவலை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி உரிய முறைப்படி அறிவித்துள்ளது.
இப்பகுதி மக்களுக்கு சேவையை வழங்க நிறுவப்பட்டிருந்த ஆண்டெனா அகற்றப்பட்டுள்ளது.
ஆண்டெனா அமைக்கப்பட்டிருந்த அந்த நிலத்தின் உரிமையாளர் தற்போது கட்டுமான பணியில் ஈடுபட உள்ளதால், அங்கே பொருத்தப்பட்டிருந்த ஆண்டெனா அகற்றப்பட்டது.
இதனால் தற்போது கைப்பேசி அழைப்புகளை ஏற்கவோ, இங்கிருந்து மேற்கொள்ளவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி இணைய சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுக்கு தற்போதைய நிலையில் வழி இல்லை என்பதால் இதே நிலை அடுத்த ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் என்றே நம்பப்படுகிறது.
தற்போதைய கொரோனா நெருக்கடியால் மொத்த மக்களும் குடியிருப்பில் இருந்தே அலுவலக பணிகளையும் மேற்கொண்டுவரும் நிலையில், கைப்பேசி மற்றும் இணைய சேவை துண்டிப்பு என்பது அப்பகுதி மக்களை கடும் அவஸ்தையில் தள்ளியுள்ளது.