தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தைவெறும் வாய்வார்த்தையில் மட்டுமே காட்டுகின்றார்கள். அதை நடைமுறைப்படுத்துவதாக எனக்கு தோன்றவில்லை என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் பொலிசாரின் ஆட்சியே நடாத்தப்படுகின்றது. பொலிசார் சுயாதீனமான முடிவுகளை எடுக்கின்றார்கள்.
ஜனாநாயகம் என்பது ஒரு துளியேனும் அவர்களின் நடவடிக்கயைில் இல்லை. இக்காரணத்தாலேயே நடத்த வேண்டிய தேர்தலை கூட நடத்தாமல் இருக்கின்றது இந்த அரசு எனவும் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் பொருளாதார பிரச்சினை, வேலையில்லா பிரச்சினை என்பன தலைவிரித்தாடுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் தொழில் செய்பவர்களைக்கூட அதிலிருந்து அகற்றும் நடவடிக்கையை அரசு முன்னெடுக்கின்றது.
இதற்கு உதாரணமே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை. இராணுவத்தை இவ்வாறான பிரச்சினைகளுக்கு பயன்படுத்துவதென்பது வரலாற்றிலேயே முதல் தடவை எனவும் குறிப்பிட்டார்.
நான் மீண்டும் பதவிக்கு வரும் காலத்தில் துறைமுக அதிகாரிகள் என்ற பதவி இருக்குமோ என்பது தெரியாது. அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு வேண்டியதை நான் செய்து கொடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.
எனது அரசாங்கம்தான் அனைத்து ஊழல்களையும் செய்தது என எம்மீது பழி சுமத்துவதிலும், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகளையும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்வதிலுமே இப்பொழுது ஆர்வம் காட்டுகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார்.