சீர்காழியில் டாஸ்மாக்கில் வாங்கிய மதுப் போத்தலில் மிதந்த தவளையால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலை வெளியே தெரியாமல் மறைக்க புது மதுப் போத்தலை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பூட்டபட்டிருந்த மது கடைகள் புதன்கிழமை முன்தினம் காலை திறக்கபட்டது. குடிக்கும் குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுப் போத்தல்களை வாங்கி சென்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் ரம் வகை மதுப் போத்தல் ஒன்று வாங்கியுள்ளார். வயல் பகுதிக்கு சென்று அந்த போத்தலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றிவிட்டு மீண்டும் போத்தலை மூடும் போது உள்ளே ஏதோ கிடப்பதை பார்த்துள்ளார்.
மதுப் போத்தலில் மிதப்பது தவளை என்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். குடிக்க ஊற்றிய மதுவை கீழே ஊற்றிவிட்டு மது போத்தலை பார்த்து புலம்பியுள்ளார். அருகில் இருந்த ஒருவர் மூலம் மதுபான கடைக்கு தவளை குறித்து தகவல் தெரிந்துள்ளது. இதனையடுத்து தகவல் வெளியே தெரியாமல் மறைக்க தவளையுடன் இருந்த மது போத்தலை பெற்றுக்கொண்டு உடனே புது மது போத்தலை கடை ஊழியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
மதுப்போத்தலில் தவளை கிடந்தது குறித்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் கேட்ட போது இதுவரை தங்கள் கவனத்திற்கு தகவல் வரவில்லை என்றும் ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் போது காலாவதி தேதி ஆகியவற்றை பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ரம் போன்ற மது வகைகளில் நிறுவனங்களில் இருந்து வரும் போது ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம் எனவே இனிவரும் காலங்களில் மதுப் போத்தல்களையும் நன்று பரிசோதித்த பின்னரே வழங்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.