திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
காட்டு யானைகளின் தொல்லையினால் அப்பகுதியைச் சுற்றி மின்வேலி பொருத்தப்பட்டுள்ளது.
சிறுவன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடைக்குச் சென்ற வேளை, மின்வேலியில் மோதி உயிரிழந்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த வேலியில் யானைகளுக்காக பயன்படுத்தப்படும் குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தாமல் இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படும் மின்சாரம் பொருத்தப்பட்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் திருகோணமலை வில்கம் விகாரை பாடசாலையில் 03 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மொறவெவ 10ம் கட்டை பகுதியைச் சேர்ந்த கவிஷ்க தினேஷ் சஞ்ஜிவ என்று தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுவன் மின்வேலியில் மோதியதையடுத்து 1990 அவசர வண்டி மூலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.