கனடா அரசு அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
3 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தில் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம் மாதத்துக்கு 1,800 டொலராக இருக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1,35,000 ரூபாய் ஆகும். இந்த திட்டம் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடம் உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நீங்கள் உங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவியுள்ளீர்கள். இந்த வேலைக்கு நீங்கள் குறைந்த பட்ச ஊதியத்தையே பெறுகிறீர்கள். எனவே நீங்கள்தான் சம்பள உயர்வுக்கு தகுதியானவர்கள்.
இந்த தொற்று நோய்களின் மூலம் நாம் காணும் ஒரு விடயம் என்னவென்றால், நமது சமூகத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் பிற வழிகளில் பாதிக்கப்படக் கூடியவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் நம் சமூகத்தின் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமானவர்கள்” என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.