அவுஸ்ரேலியாவில் உள்ள 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தற்காலிக விசாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், வெளிநாட்டு மாணவர்கள், அகதிகள் ஆகியோருக்கு கொரோனா கால உதவிகள் வழங்குமாறு பல அமைப்புகள் அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.
சுமார் 180 க்கும் மேற்பட்ட அமைப்புகள் விடுத்துள்ள இக்கோரிக்கையில், அரசு இவர்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பினால் அகதிகள், இணைப்பு விசாவில் உள்ளவர்கள் போதுமான பணமின்றி தவிப்பதாகவும் வீடற்ற நிலையை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இணைப்பு விசாக்களில் வசிக்கும் 90,000 ற்கும் மேற்பட்டோர் எவ்வித பொருளாதார உதவியுமின்றி தவிப்பதாக, கோரிக்கை வைத்துள்ள 186 அமைப்புகளில் ஒன்றான அவுஸ்ரேலிய அகதி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், தற்காலிக விசா கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உதவுவது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசின் பொருளாளர் ஜோஷ் ப்ரீடென்பெர்க் அலுவலகம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதேசமயம், ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹோஷ் ப்ரீடென்பெர்க், “அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை என்றால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பலாம்,” எனத் தெரிவித்துள்ளார்.