இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றிய தமிழ் இளைஞர்கள், தொழிலில் இருந்து நிறுத்தப்பட மாட்டார்கள் என, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தல்செவன விடுதியில் பணியாற்றியவர்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னராக பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார்களா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே இவ்வாறு பதில் வழங்கினார்.
அது முற்றிலும் பொய்யான செய்தி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில்தான், தமிழ் இளைஞர் யுவதிகளை குறிப்பாக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை இராணுவத்திற்கு இணைத்துக் கொண்டார்.
2011ம் ஆண்டில்தான் தமிழ் இளைஞர்கள் இராணுவத்துடன் இணைந்து சேவையாற்ற இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களும் புனர்வாழ்வு பெற்று இராணுவத்துடன் இணைந்து சேவையாற்றினார்கள்.
பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவர் ஏற்படுத்திய திட்டத்தினை நோக்கத்தினை தற்போது ஜனாதிபதியாக அவர் பதவிவகிக்கும் இந்த நேரத்தில் அதனை உதாசீனம் செய்துவிடும் எந்த நோக்கமும் கிடையாது.
மக்களுடன் இருக்கும் தொடர்பினை இல்லாமல் செய்யும் செயலை நாம் ஒருபோது செய்யப் போவது கிடையாது.
தல்செவன விடுதியில் பணியாற்றியவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.
வைரஸ் பரவலை அடுத்து யாரும் விடுதிகளில் தங்க விரும்பாத காரணத்தினால், நாட்டின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கின்றன.
தனியார்துறை சிலவற்றில் நிரந்தரமாக பணியாற்றியவர்கள் தவிர்ந்த தற்காலிகமாக பணியாற்றியவர்களை இரண்டு மாத ஊதியத்தினை வழங்கி அவர்களது சேவையினை இந்த காலப்பகுதியில் இடைநிறுத்தியிருக்கின்றோம்.
மீண்டும் நிலமை வழமைக்கு திரும்பியதும் உடனடியாகவே அவர்களை சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.