இரும்புச்சத்து பற்றாக்குறையால் நாக்கு வீங்குதல், சீரற்ற உணவு பசி போன்ற பிரச்னைகளை உருவாக்கும்.
வெயில் காலத்தில் தாகத்தை தணிக்க ஃபிரிட்ஜில் ஐஸ் கட்டிகளை வைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் பலரிடமும் உண்டு. ஆனால் அதை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணத்தினை தற்போது காணலாம்.
நீங்கள் ஐஸ் கட்டிகள் என்பது வெறும் தண்ணீர் கட்டிகள்தானே அதை அப்படியேக் குடிப்பதும், கட்டியாக்கிக் குடிப்பதிலும் என்ன வித்தியாசம் உள்ளது என நினைக்கலாம். ஆனால், அவை பல உடல் ரீதியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சமீபத்தில் வந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிலர் ஐஸ் கட்டிகளை மிகவும் விரும்பி உண்பார்கள். அவர்கள் உண்பதைப் பார்க்கும்போது எதிரில் இருப்பவர்களுக்கே பற்கள் கூசும். ஆனால் அவர்கள் ரசித்து கடித்து உண்பார்கள். இப்படி உண்போரை பகோஃபாகியா என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் பல நாள்பட்ட நோய்களால் அவஸ்தைப்படுவார்கள் என்கிறது.
உணவில் குறைபாடு
அவர்களுக்கு உணவு உண்ணும் முறையிலும் பல பிரச்சனைகளைச் சந்திப்பார்கள் என்கிறது. ஆய்வு. இவர்களுக்கு பிகா என்னும் உணவுக் கோளாறு இருக்கும். அதாவது நாம் சாதாரணமாக உண்ணும் உணவைத் தவிர்த்து களிமண், மண், பல்பம், சாக்பீஸ் போன்ற எந்தவித ஊட்டச்சத்தும் இல்லாத பொருட்களை உட்கொள்வார்கள்.
பற்களைப் பாதிக்கும்
ஐஸ்கட்டிகளுக்கு பற்களை சிதைக்கும் வலிமை உண்டு. அவை அதிக பற்கூச்சத்தை ஏற்படுத்தும். சிலசமயம் பற்களை உடைக்கும் தன்மையும் ஐஸ் கட்டிகளுக்கு உண்டு. பற்கள் மட்டுமல்லாமல் ஈறுகளையும் சிதைக்கும். நீங்கள் உடைந்த ஐஸ் கட்டிகளை உண்டாலும் அவை ஈறுகள் மற்றும் பற்களை பாதிக்கும்.
இரும்புச்சத்து பற்றாக்குறை
இரும்புச்சத்து பற்றாக்குறையால் நாக்கு வீங்குதல், சீரற்ற உணவு பசி போன்ற பிரச்னைகளை உருவாக்கும். இப்படி ஐஸ் கட்டிகளை உண்பதையும் ஒரு குறைபாடு என்றே கூறுகின்றனர். இதை மருத்துவரின் அறிவுரைப்படி மற்ற சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இரும்புச் சத்து அதிகரிக்கும். அதேசமயம் ஐஸ் கட்டி உண்பதையும் தடுக்கும்.
மன ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும்
மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி காரணமாக ஏற்படும் உணர்ச்சிக் குறைபாடுகளால் உணவு சீர்குலைவு ஏற்படுகிறது. இது மாற்ற முடியாத குறைபாடல்ல. தக்க மருத்துவரை ஆலோசித்து உங்களுக்கு இருக்கும் பல பிரச்னைகளை சமாளிக்கலாம்.
ஐஸ்கட்டி உட்கொள்வது உடலுக்கு அத்தனை நன்மைக் கிடையாது. இதில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை. வெயில் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டுமெனில் பழங்கள் உண்ணலாம். குளிர்ச்சியான நீர் அருந்தலாம். அதில் கொஞ்சம் பச்சைத் தண்ணீர் கலந்து குடிக்கலாம்.