அர்ப்பணிப்பு இல்லாமல் ஒருபோதும் தமிழர் உரிமையை பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் சொந்தக் காணியில் அமைக்கப்படும் செங்காமம் ஆலயத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்களால் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப் பிரதேசத்தின் றொட்டைக் கிராமத்திற்கு புதன்கிழமை(13) மாலை சென்றிருந்தார். இதன்போதே, இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது விநாயகமூர்த்தி முரளிதரன் அங்குள்ள பொதுமக்களை நேரில் சென்று சந்தித்ததுடன் அங்கு பல வருட காலமாக அக்கிராமத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் ஒன்றான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சனைக்கு உரிய தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.
குடிநீர் வழங்கலுடன் தொடர்புடைய பொறியியலாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, ஒரு வாரத்திற்குள் தீர்வு காண கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, அங்குள்ள ஆலய வளாகத்தில் கட்டப்படும் சந்தையையும் பார்வையிட்டார்.
பிரதேசசபை தவிசாளருடன் தொலைபேசியில் உரையாடி, கட்டுமான பணியை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். பிரதேசசபை தவிசாளரும் இதற்கு இணக்கம் தெரிவித்தார்.