அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட 6 இலட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி கடந்த மார்ச் மாதம் 5.2 வீதமாக காணப்பட்ட வேலையற்றோர் வீதம் ஏப்ரல் மாதம் 6.2 ஆக (seasonally adjusted) உயர்வடைந்துள்ளது.
220,500 முழுநேர வேலைகள் மற்றும் 373,800 பகுதிநேர வேலைகள் என மொத்தமாக 594,300 வேலைகள் கடந்த ஏப்ரல் மாதம் இழக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியான தரவுகள் கூறுகின்றன.
கொரோனா தொடர்பில் கடந்த மார்ச் இறுதியில் கொண்டுவரப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடுகளே இவ்வதிகரிப்புக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பெருமளவிலான அவுஸ்திரேலியர்கள் வேலைகளை இழந்துள்ளமை மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் இக்கடினகாலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டியுள்ளதாகவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்தார்.
ஆனால் வேலையற்றோர் வீதத்தில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பு எதிர்பார்த்த ஒன்று எனத் தெரிவித்த அவர், இப்பாதிப்பு இன்னும் சிலகாலத்திற்கு தொடரப்போவதை தவிர்க்கமுடியாது எனவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தமது அரசு தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.