கச்சத்தீவில் புதுப்பிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயத்தின் தொடக்க விழாவில் தமிழக மீனவர்கள் 100 பேர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா விடுத்த கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டிருப்பது, சசிகலா இப்போதே முதல்வர் ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவானது, இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது செல்லாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில், அவரது சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகும்போதும், பிரதமருக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்களில், கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
மேலும், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தை இலங்கை அரசே தன்னிச்சையாக புனரமைக்கப்போவதாக வெளியான தகவலையடுத்து, தமிழக மீனவர்களின் பங்களிப்பையும் ஏற்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திறப்புவிழாவில் தமிழகத்தில் இருந்து 100 மீனவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சசிகலா இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதனை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் இருந்து 100 மீனவர்கள், கச்சத்தீவு தேவாலய விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளித்திருப்பதாக ஆறுமுகம் தொண்டைமானுக்கு அதிபர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆறுமுகம் தொண்டைமானுக்கு இலங்கை அதிபர் எழுதிய கடிதத்தில், “இந்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் சசிகலா ஆகியோர் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் அதிக மீனவர்கள் பங்குகொள்ள அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தனர்.
இதுதொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவின்படி, ஏற்கெனவே 20 தமிழக மீனவர்களை அனுமதிக்க முடிவெடுத்திருந்த நிலையில், இப்போது 100 தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என கூறியிருக்கிறார்.
மேலும் இதுதொடர்பாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான் சசிகலா மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தனித்தனியாக எழுதியுள்ள கடிதங்களில் இலங்கை அதிபரின் ஒப்புதலை உறுதி செய்துள்ளார்.
சசிகலா என்ன தமிழகத்தின் முதல்வரா…? இல்லை இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சரா… செயலாளரா…? எந்தவொரு அரசாங்க பொறுப்பிலும் இல்லாத சசிகலா கடிதம் எழுதுகிறார்… அதற்கு மிக அக்கறையாக பதில் சொல்கிறார் ஒரு தேசத்தின் அதிபரும்… நாடாளுமன்ற உறுப்பினரும்!
ஹூம்…. முதல்வராக மனதளவில் இப்போதே செயல்ப்பட துவங்கிவிட்டாரா சசிகலா…?