சர்ச்சைக்குரியதாக மாறியுள்ள பொத்துவில் கடற்கரை விகாரைக்கு கடற்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று அங்கு கடற்படையின் அணியொன்று சென்றது. தற்போது விகாரையையொட்டிய கட்டடம் ஒன்றில் கடற்படையினர் தங்கியுள்ளனர். விரைவில் அங்கு முகாம் அமைக்கப்படவுள்ளது.
பொத்துவில் கடற்கரை விகாரை அமைந்துள்ள காணி தொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது. அந்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகளிற்குரிய காணியென அவர்கள் உரிமைகோரி வருகிறார்கள். எனினும், பாரம்பரிய பௌத்த வழிபாட்டிடம் அங்கு அமைந்துள்ளதாக பௌத்த பிக்குகள் தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பிட்ட நிலம் தொடர்பாக அந்த பிரதேசவாசிகள் நீதிமன்றத்தை நாட தயாரான சமயத்தில் கொரோனா இடர்நிலைமை ஏற்பட்டது.
இந்தநிலையில், கடற்கரை விகாரையின் தொல்லியல் எச்சங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் துறை அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது.
இதையடுத்து, நேற்று அம்பாறைக்கு சென்ற பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன, அங்கு சென்று நிலைமையை பார்வையிட்டார். அத்துடன், கடற்படையினர் அந்த பகுதியை பாதுகாக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, இன்று அங்கு கடற்படையினர் முகாமிட்டுள்ளனர்.