முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் காட்டிற்குள் சென்ற பெண் ஒருவர் ஆறு நாட்கள் காட்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மல்லாவி ஒட்டங்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த குணசிங்கம் கனகமலர் (வயது 44)என்ற பெண் கடந்த 04ஆம் திகதி தனது வீட்டிற்கு அண்மையாக உள்ள காட்டுப்பகுதியில் கீரை வகை ஒன்றை பறிப்பதற்காகச் சென்றிருக்கின்றார்.
இதனையயடுத்து மாயமான நிலையில் அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத குடும்பத்தினர் மல்லாவில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் உறவினர்கள் அயல் கிராமங்களுக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் ஆறு நாட்கள் பின்னர் 10ஆம் திகதி ஒட்டங்குளத்தின் அயற்கிராமங்களில் ஒன்றான பெரியமடு காட்டுப் பகுதியில் குறித்த பெண்ணை அவதானித்த கிராமத்து மக்கள் உடனடியாக அப்பெண்ணின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு தகவல் வழங்கியிருக்கின்றனர்.
அதன் பின்னர் குடும்பத்தார் பெரியமடு பகுதிக்குச் சென்று குறித்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பாலைப்பழக் காலம் என்பதால் பாலைப்பழம் மற்றும் காட்டில் காணப்பட்ட உணவுப் பொருட்களை உண்டு தனது பசியைப் போக்கியதாகத் தெரிவித்துள்ள அப்பெண், காட்டில் யானை, கரடி உட்பட்ட கொடிய விலங்குகளை தான் கண்டதாகவும் எனினும் அவை தனக்கு ஆபத்தை விளைவிக்கவி்ல்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை முன்னைய காலங்களில் காட்டிற்குச் செல்பவர்கள் தடம்மாறி பயணிக்கும் சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.