ஏசியில் இருந்து கொண்டு டுவிட்டில் கவலையை காட்ட முடியாது என்பதால் இறங்கி வேலை செய்கிறேன் என்று பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இன்னும் தடுப்பு மருந்து அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினர் ஓய்வெடுத்துக் கொள்வதற்கு தனது நட்சத்திர ஓட்டலை வழங்கினார். இதனிடையே தினமும் 45 ஆயிரம் பேருக்கு அவர் உணவும் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் செல்ல, பத்து பேருந்துகளை ஏற்பாடு செய்து, கடந்த சில நாட்களுக்கு முன் அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்தும் செய்து வருகிறார்.
இதுபற்றி சோனு சூட் கூறியதாவது: புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவது கடமை. நெடுஞ்சாலைகளில் அவர்கள் குழந்தைகளுடனும் குடும்பத்தினருடன் செல்வதை பார்த்திருக்கிறோம். அதைப் பார்த்துவிட்டு, சாலைகளில் இறங்காதவரை, அவர்களில் ஒருவராக மாறாத வரை, ஏசி அறையில் உட்கார்ந்தபடி டுவீட்டில் கவலையை தெரிவிக்க முடியாது. இல்லை என்றால் நமக்காக யாரோ ஒருவர் காத்திருப்பார் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.
தினமும் எனக்கு குறுஞ்செய்திகளும், மெயில்களும் குவிந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரின் கோரிக்கையும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். இரவில் என்னால் தூங்க முடியவில்லை. அவர்களை, அவர்களது சொந்த கிராமங்களுக்கு அனுப்பி குடும்பத்தினருடன் சேர்த்துவிட விரும்புகிறேன்.
காலையில் இருந்து மாலை வரை இந்த வேலையைதான் செய்து வருகிறேன். லாக்டவுன் முடியும் வரை எனது ஒரே வேலை, இதுதான். எனக்கு வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியை சந்தோஷத்தை, இது கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர், விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.