பிரித்தானியாவில் 58 நாட்கள் செயற்கை சுவாசம் அளித்த நிலையில், இந்திய மருத்துவர் சிகிச்சையில் ஒரு கொரோனா நோயாளி குணம் அடைந்து வருகிறார்.
தெற்கு கடலோர நகரமான சவுதாம்ப்டன் பொது மருத்துவமனையில் 35 வயதான குறித்த பெண், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது உடல்நிலை மோசமானதால் இவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 58 நாட்களாக தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
குறித்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் சஞ்சய் குப்தா தெரிவிக்கையில், குறித்த பெண்மணி பூரண குணமடைய இன்னும் பல நாட்களாகலாம்.
ஆனால் நீண்ட 58 நாட்களுக்கு பிறகு அவர் பேசியுள்ளது, அவருக்கு அளித்துவந்த சிகிச்சை பலனளிப்பதாகவே தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அவர் மிகவும் பலவீனமாக இருந்து வந்தார். ஒரு விரலை கூட உயர்த்த முடியாத நிலையில் இருந்தார்.
இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது. அவர் இப்போது முதன்முதலாக பேசினார். அவரால் தகவல்கள் பரிமாற முடிகிறது. அவர் இப்போது அபூர்வமாக குணம் அடைந்து வருகிறார்.
அவருக்கு தசைகளில் பலம் இல்லாமல் இருந்தது. ஒருவரை வென்டிலேட்டரில் வைக்கிறபோது அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கிறபோது, எலும்பு தசைகள் சிதைந்து போகும்.
அதுவே கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் என்கிறபோது, வெண்டிலேட்டரில் வைக்கிறபோது மரணம் ஏற்படுவதற்கு அதிகபட்ச வாய்ப்பு உண்டு. எனவே இந்தப் பெண் மீண்டு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்து இருக்கிறது என்றார்.
58 நாட்களுக்கு பின்னர் கொரோனா நோயாளி ஒருவர் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சையில் இருந்தவர் குணமடைந்து வருவது சக மருத்துவர்களால் பாராட்டப்படு வருகிறது.