மனிதர்களில் இருந்தே ஒரு சிலரைத் தன் தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தன் வேதத்தை இறைவன் வழங்கினான். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அந்த இறைத்தூதர்கள் அனைவரும் தாமே நடைமுறையில் வாழ்ந்து காட்டி நமக்குக் கற்றுத் தந்தார்கள்.
அதில் இறுதித் தூதராக அனுப்பப்பட்டவர்களே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இன்றைய சவுதி அரேபியாவில், மக்கா மாநகரில் கி.பி.571-ம் ஆண்டு, ரபியுல் அவ்வல் பிறை 12 அன்று அப்துல்லாஹ்-ஆமினா தம்பதியரின் மகனாகப் பிறந்தார்கள், நபிகளார்.
பிறக்கும் முன்பே தந்தையையும், பிறந்த ஆறு ஆண்டுகளில் தாயையும் இழந்தார்கள். பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிப் அரவணைப்பிலும், அவர் மரணித்த பிறகு பெரிய தந்தை அபூதாலிப் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.
சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக கால்நடைகளை மேய்க்கும் தொழிலைச் செய்தார்கள். இளம் வயதில் தன்னுடைய பெரிய தந்தையின் வணிகக்குழுவில் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர் களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் பிறந்த பிரதேசத்தில் இளைஞர்களின் வாழ்க்கை முறை ஒழுக்கக்கேடுகளின் உறைவிடமாக இருந்தது.
அந்த இளமைப்பருவத்தில் நபிகளார் நேர்மையுடன் நடந்து வந்ததால் ‘நம்பிக்கைக்குரியவர்’ (அல் அமீன்), ‘வாய்மையாளர்’ (அஸ்ஸாதிக்) என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டார்கள்.
இதைக் கேள்விப்பட்டு அரேபியாவின் மிகப்பெரிய வணிகச் சீமாட்டி கதீஜா தனது வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை நபிகளாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நபிகளார், கதீஜா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். அப்போது நபிகளாரின் வயது 25, கதீஜாவின் வயது 40. கதீஜா, திருமணமாகி இருமுறை விதவையானவர்.
நபிகளார் தனது 40 வயதில், மக்கா நகருக்கு அருகே உள்ள ‘ஹிரா’ குகைக்கு அடிக்கடி சென்று தனித்திருந்து தியானத்திலும், இறைச் சிந்தனையிலும் ஈடுபட்டு வந்தார்கள்.
ஒருநாள் வானவர் ஜிப்ரீல் (ரலி) அவர்கள் மூலமாக “ஓதுவீராக! (நபியே!) படைத்த உமது இறைவன் திருப்பெயர் கொண்டு” என்று தொடங்கும் இறைச் செய்திகள் (‘வஹீ’) இறக்கி அருளப்பட்டன.
இதனால் அச்சம் மேலிட நடுங்கியவாறு வீட்டுக்கு வந்து மனைவி கதீஜாவிடம் நடந்ததைக் கூறினார்கள். அவர் நபிகளாரை நோக்கி, “கலங்காதீர்கள். உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. நீங்கள் ஏழைகளுக்கு தாராளமாக வழங்கு கிறீர்கள். அநாதைகளையும், விதவைகளையும், ஆதரவற்றவர்களையும் ஆதரிக்கிறீர்கள். உங்களுக்கு நான் பக்கபலமாக இருப்பேன். இறைவன் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டான்” என்று ஆறுதல் கூறினார்கள்.
இதன்பின்னர் கதீஜா தமது உறவினர் வரக்கா பின் நவ்பல் என்ற அறிஞரிடம் நபிகளாரை அழைத்துச் சென்றார். நடந்த நிகழ்வுகளைக் கேட்ட வரக்கா, “முகம்மதே! உமக்கு இறைச்செய்தியை கொண்டு வந்தது வானவர் ஜிப்ரீலே. இறை அழைப்புப் பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மக்கள் உங்களைத் தூற்றுவார்கள்; துன்புறுத்து வார்கள். ஊரை விட்டே நீங்கள் வெளியேறும் நிலை வரும்” என்றார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு நபிகளார் இறைத்தூதர் என்னும் அந்தஸ்தைப் பெற்றார். இதற்கு முன்பு வந்த இறைத்தூதர் களைப் போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தொடர்ந்தும், விட்டு விட்டும் இறைச்செய்திகள் வரத் தொடங்கின.
தொடக்கத்தில் ரகசியமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் நபிகளார் இறை அழைப்புப் பணியை மேற்கொண்டார்கள். இதைக் குரைஷிகள் ஏற்க மறுத்து, அவர்களைக் கல்லாலும் கடும் சொல்லாலும் தாக்கினார்கள். பொறுமையுடன் இறைப்பணியை மேற்கொண்டபோதிலும் குரைஷிகளின் தொல்லை எல்லை மீறிப்போனது.
இதனால் தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் மதீனா சென்றார்கள். அந்த நகர மக்கள் நபிகளாரை வரவேற்று இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவர்களைத் தங்களது ஆன்மிக, அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களைப் போற்றிக் கொண்டாடினார்கள். மதீனா நகர மக்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள மக்களும் நபிகளாரைப் பற்றிக் கேள்விப்பட்டு கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள்.
நபிகளாரின் வளர்ச்சியைப் பொறுக்காத மக்கா நகர குரைஷிகள், மதீனா மீது பலமுறை போர் தொடுத்து தோல்வியைத் தழுவினார்கள். சமாதான உடன்படிக்கையை மக்கா வாசிகள் மீறினார்கள். இதனால் நபிகளார் ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் மாதம் 10-ந்தேதி பத்தாயிரம் தோழர்களுடன் சென்று மக்காவை வெற்றி கொண்டார்கள். ‘எவர் மீது பழிவாங்கல் இல்லை’ என்று உறுதி அளித்த நபிகளார் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.
தோழர்கள் முன்னும் பின்னும் புடை சூழ இறை இல்லமான கஅபாவுக்குச் சென்றார்கள் நபிகளார். இறை இல்லத்தை வலம் வந்தார்கள்.
“சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” (திருக்குர்ஆன்-17:81) என்ற வசனத்தை ஓதியவர்களாக அங்கிருந்த 360 சிலைகளையும் அகற்றினார்கள். அங்கிருந்த உருவப்படங்களும் அழிக்கப்பட்டன.
‘அல்லாஹ் அக்பர்’ (இறைவன் பெரியவன்) என்ற தக்பீர் முழக்கம் எங்கும் எதிரொலித்தது. இறை இல்லத்தை அவர்கள் வலம் வந்தார்கள். ‘மகாமே இப்ராகீம்’ (இப்ராகீம் நபி தொழுத இடம்) என்ற இடத்தில் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
23 ஆண்டுகளில் அவரது கொள்கைகளை அரேபிய தீபகற்பம் முழுமையாக ஏற்றுக்கொண்டது. தமது வாழ்வின் இறுதி ஆண்டான கி.பி.632-ம் ஆண்டில் தோழர்களுடன் மக்கா சென்று புனித ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றினார்கள். அதே ஆண்டில் தமது 63-ம் வயதில் மரணம் அடைந்தார்கள்.
ஆயிரம் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு அகண்ட சாம்ராஜ்யத்தை- ஓர் ஒழுக்கமான சமுதாயத்தை 10 ஆண்டுகளில் உருவாக்கிய சாதனைச் சரித்திரம் உலகில் நபிகளாருக்கு மட்டுமே உண்டு.