வவுனியாவில் அக்கினி சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியா குடியிருப்பு குளத்தடியில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து நிகழ்வுக்கான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுவந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஏற்பாட்டாளர்களை அழைத்து இவ்விடத்தில் நினைவேந்தலை நடாத்த வேண்டாம், இது பொதுவான இடம் என்று தெரிவித்திருந்தனர்.
இதனால் பொலிசாருக்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் கடுமையான முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
நாளையதினம் இடம்பெறவுள்ள போர் வெற்றிவிழா நிகழ்வை உங்களால் நிறுத்த முடியுமா என்று பொலிசாரிடம் கேள்வி எழுப்பிய ஏற்பாட்டாளர்கள், இங்கே கடமையில் நிற்கும் புலனாய்வு பிரிவினர் சமூக இடைவெளியை பின்பற்றியா பணியை மேற்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தனர்.
எனினும் குறித்த பகுதியில் நிகழ்வை நடாத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.
பின்னர் பொலிசாருடன் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் பேச்சுவார்த்தை நடாத்தியதையடுத்து, பதாதை எதனையும் காட்சிபடுத்தாமல் சமூக இடைவெளியை பினபற்றி நிகழ்வை நடாத்துமாறு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பதாதை அகற்றப்பட்டு நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
இதேவளை பேச்சுவார்தை இடம்பெறும் போது காணொளியினை எடுக்க வேண்டாம் என்று பொலிசாரால் ஊடகவியலாளர்களிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதனை பொருட்படுத்தாமல் ஊடகவியலாளர்கள் தமது பணியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.