கண்ணீர் விட்டு அழுவதுதான் உண்மையான ஜெயலலிதா என அவரது அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
இது குறித்து ஆங்கில ஏடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ”கடந்த 1974-ம் ஆண்டு ஒரு தீபாவளி தினத்துக்கு முன்னதாக நான் பிறந்தேன். அந்த தருணத்தில் மருத்துவமனையில் எனது பெற்றோருடன் எனது அத்தையும் இருந்ததாக சொல்வார்கள்.
எனக்கு ‘தீபா’ என அத்தைதான் பெயர் சூட்டினார்கள். தீபா என்றால் வெளிச்சம் என்று அர்த்தம். ஆனால், எனது அத்தையின் மரணம் குறித்து இன்னும் இருள் விலகாத நிலையில்தான் நான் இருக்கிறேன். நான் அவரை மிகவும் நேசித்தேன். என்னால் முடிந்தவரை அத்தையுடனேயே அதிகமுறை தங்கவும் முயற்சித்துள்ளேன்.
சிறுவயதில் இருந்தே எனக்கு அவர்தான் எனது ரோல் மாடல். அத்தையின் உறுதி, தன்னம்பிக்கை, தன்னலமற்றத்தன்மை, உழைப்பு இவைகள் எல்லாம் எனக்குப் பிடித்தவை.
நாங்கள் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறிய பிறகு, திடீரென்று அந்நியர்கள் அங்கே நிரம்பியிருந்தனர். அதற்குப் பிறகும் நான் அங்கே செல்வேன். ஆனால், அவர்களிடம் என்னால் சகஜமாக பழக முடியவில்லை.
கடந்த 1991-ம் ஆண்டு அத்தை முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். பதவியேற்ற தினத்தன்று எங்கள் குடும்பத்தினருடன் அத்தை மதிய விருந்து உண்டார்.
அப்போது எனக்கு 16 வயது. மூத்த அதிகாரிகளிடம் எனது தந்தை, எனது சகோதரர் என ஒவ்வொருவரிடமும் அத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
என்னைக் கண்டாலே அத்தையின் முகம் மலரும். என்னை நன்றாகப் படிக்க சொல்வார்.
அந்த தருணங்கள் என்னால் மறக்க முடியாதவை. ஒருநாள் என்னிடம், ‘உன்னை எனது சொந்த குழந்தையாகவே வளர்க்க ஆசைப்பட்டேன் ‘ என்றார் எனது அத்தை.
அந்த வார்த்தையை கேட்ட பிறகு, அத்தையை சந்திக்க அடிக்கடி போயஸ்கார்டன் செல்வேன்.
எனது அத்தை பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள், விழாக்களுக்கு கூட எங்கள் வீட்டுக்கு சிறப்பு அழைப்பிதழ்கள் வருவது உண்டு.
இவ்வாறு தனது அத்தையை குறித்து தெரிவித்துள்ளார் தீபா.