வங்காளவிரிகுடாவில் இயல்பான வெப்பநிலையை விடவும் அதிகமான வெப்ப நிலை காரணமாக சூப்பர் புயல்கள் உருவாவதாக வானிலை ஆய்வு மற்றும் வளிமண்டல விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
1999 ஆம் ஆண்டு பாரதீப் மற்றும் ஒடிசாவைப் புரட்டி எடுத்த சூப்பர் புயலுக்குப் பிறகு தற்போது வங்கக்கடலில் அம்பன் (இந்தியாவில் உம்பன் என அழைக்கிறார்கள) புயல் உருவாகி சூப்பர் புயலாக இந்தியாவின் மேற்கு வங்கம் நோக்கி கரையைக் கடக்கவுள்ளது. இலங்கையிலும் புயல் தாக்கம் அவதானிக்கப்பட்டு வருகிறது.
கடல்களின் மேற்புற உஷ்ணமாதலால் உருவாகும் வெப்பம் மற்றும் ஈரப்பதங்களினால் புயல்கள் தங்கள் ஆற்றல்களைப் பெறுகின்றன. இந்த ஆண்டு வங்கக்கடலில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தது. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டினால் புவிவெப்பமடைதல் துரிதமடைந்து கடல்களின் மேற்பரப்பு உஷ்ணமாகின்றன. இதனையடுத்து சாதாரண புயல்கள் சூப்பர்புயல்களாக உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
“வங்கக்கடலில் மே மாதத்தின் முதல் 2 வாரத்தில் சீராக தினமும் 32-34 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் மிகப்பெரிய சாதனை வெப்ப அளவு மாற்றங்களாகும், இது போன்று இதுவரை நாங்கள் கண்டதில்லை” என்று இந்திய உஷ்ணவியல் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் என்பவர் தெரிவிக்கிறார்.
இதனால்தான் உம்பன் புயல் 1ஆம் எண் புயலிலிருந்து 18 மணி நேரத்தில் 5ஆம் எண் சூப்பர் புயலாக உருவெடுத்தது. இது வழக்கத்துக்கு மாறான திரட்சியாகும். இதுவும் வங்கக்கடலின் அதி உஷ்ண நிலையின் விளைவுதான்.
புவிவெப்பமடைதல் விளைவாக கடல் மேற்பரப்பு நீர் உஷ்ணமடைதல் என்பது வங்கக்கடலில் மட்டுமல்லாது அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், ஆகியவற்றிலும் நிகழ்ந்துள்ளது. இதனால் புயல் எச்சரிக்கை கணிப்பு துல்லியமாக இருப்பதில்லை என்பதோடு பருவமழை வகைமாதிரிகளையும் இடையூறு செய்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
இன்னொரு ஆய்வாளர் கொரோனா லொக்டவுன் காரணமாக தூசி, புகை உள்ளிட்ட துகள்பொருள் உமிழ்வு அளவு குறைவாக இருப்பதால் பிளாக் கார்பன் உள்ளிட்ட துகள்பொருள் சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிப்பது குறைந்துள்ளது, இது மேற்பரப்பிலிருந்து உஷ்ணத்தை கொண்டு செல்ல கூடியது, இது குறைந்ததால் உஷ்ணம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தோ-கங்கை சமவெளிகளிலிருந்து, தூசி, புகை உள்ளிட்ட துகள்பொருள் உமிழ்வு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வங்கக்கடலுக்கு கடத்தப்படுகிறது. இதனால் கடல்களில் மேக உருவாக்கம் அதிகரிக்கிறது என்கிறார் வானியல் ஆய்வு பேராசிரியர் வி.வினோஜ் என்பவர்.
“அதாவது வங்கக்கடலில் குறைந்த அளவு மேகங்கள் ஆனால் அதிக வெப்பம் ஆகியவை புயலை வலுவடையச் செய்கிறது. லொக் டவுன் காலக்கட்டத்தில் வெப்ப நிலை 1-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விடக் கூடுதலாக இருந்தது. ஆனால் துகள்பொருள் உமிழ்வு காற்றில் கலந்த அளவு மற்றும் இதன் பங்களிப்பு என்ன என்பது இனிமேல்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்கிறார் வினோஜ்.
இந்த கோணத்திலும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.