அரங்கத்தில் இரசிகர்கள் இல்லாமல் நடந்த கால்பந்து விளையாட்டு போட்டியில், பார்வையாளராக பாலியல் பொம்மைகள் வைக்கப்பட்ட விவகாரத்தில் தென்கொரியா அணி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் உலகெங்கும் விளையாட்டு போட்டிகள் இரத்து செய்யப்பட்ட நிலையில், தென் கொரியாவில் கால்பந்து போட்டி நடந்தது. தென்கொரியாவின் தொழில்முறை கால்பந்து அணியான எஃப்.சி. சியோல், இரசிகர்களை அனுமதிக்காமல் மூடிய கதவுகளுக்கு பின்னால் போட்டியை நடத்தியது.
நடப்பு சாம்பியனான ஜியோன்புக் மோட்டார்ஸ், தென்மேற்கு நகரமான ஜியோன்ஜூவில் சுவான் ப்ளூவிங்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கிட்டத்தட்ட 40,000 பேர் அமரக்கூடிய வசதிபடைத்த அரங்கத்தில் இரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் பாலியல் பொம்மைகள் இருக்கையில் அமர வைத்துவிட்டு போட்டி நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், கே-லீக் கால்பந்து கிளப் மீது சமூக ஊடகங்களில் கண்டபடி கொட்டி தீர்த்தனர்.
அதனால் கடும் பின்னடைவை எதிர்கொண்ட கே-லீக் போட்டி ஏற்பாட்டாளர்கள் இவ்விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரினர்.