அமெரிக்காவில் வீதியில் கிடந்த 18 கோடி ரூபாவை பொலிசில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் கரோலின் நகரை சேர்ந்த தம்பதி டேவிட்-எமிலி சாண்டஸ். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த இவர்கள், காரில் நெடுந்தூர பயணம் மேற்கொள்ள விரும்பினர்.
அதன்படி கணவன், மனைவி இருவரும் தங்களின் 2 மகன்களை அழைத்து கொண்டு காரில் நகர் வலத்துக்கு புறப்பட்டனர். செல்லும் வழியில் வீதியின் நடுவே 2 பைகள் கேட்பாராற்று கிடந்ததை அவதானித்தனர்.
இதை பார்த்த டேவிட்-எமிலி சாண்டஸ், யாரோ குப்பைகளை மூட்டைக்கட்டி சாலையில் வீசி சென்றிருக்கிறார்கள் என்று நினைத்தனர். எனவே குப்பையை அப்புறப்படுத்தும் நோக்கில் 2 பைகளையும் தங்கள் காரில் எடுத்து போட்டுக்கொண்டு புறப்பட்டனர்.
ஆனால் பின்னர் அவர்கள் அந்த பைகளை மறந்துவிட்டார்கள். வீட்டுக்கு திரும்பியதும் காரில் இருந்து இறங்கியபோதுதான் அவர்களுக்கு அந்த பைகள் குறித்து நினைவுக்கு வந்தது.
பைகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அதில் என்ன இருக்கிறது என காண விரும்பினர். அதன்படி பைகளை பிரித்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக அமெரிக்க டொலர்கள் இருந்தன. அதை எண்ணி பார்த்தபோது 1 மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் 187,097,000 ரூபா) இருந்தது.
இதையடுத்து, டேவிட் -எமிலி சாண்டஸ் தம்பதி உடனடியாக பொலிஸுக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் 1 மில்லியன் டொலரை அப்படியே ஒப்படைத்தனர்.
பொலிஸார் இந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வீதியில் கிடைத்த பணத்தை பொலிசாரிடம் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.