கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதாகவும் மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
நிகழும் மோசமான காலநிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 430 பேர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
“அம்பன் ” சூறாவளியின் தாக்கத்தினால் இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ள போதிலும் கூட இன்று அதிகாலை தொடக்கம் நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டது.
“அம்பன்” சூறாவளி இலங்கையின் திருகோணமலை பகுதியில் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் கடந்துள்ள நிலையில் சூறாவளியின் தாக்கத்தில் இருந்து இலங்கை முழுமையாக விடுபட்டுள்ளது.
எனினும் மழைக்காலநிலை மேலும் சில தினங்கள் தொடரும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மழைக்காலநிலை தொடர்ரும் அறிகுறி
இப்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் 25,26 ஆம் திகதிகளில் மீண்டும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
எவ்வாறு இருப்பினும் இன்று வரையில் எந்தவொரு பிரதேசத்திலும் கனமழை பதிவாகவில்லை என்பதால் களனி கங்கை, களு கங்கை, கின் கங்கை, நில்வலா கங்கை, கிரிந்தி ஓயா, மாதுறு ஓயா, கும்புக்கன் ஓயா, மகாவலி கங்கை, மல்வத்து ஓயா,மஹா ஓயா ஆகியவற்றின் நீர் மட்டமும் குறைவாகவே காணப்பட்டது.
எனினும் நீர்நிலை பகுதிகளை அண்மித்து வாழும் மக்கள் தொடர்ந்தும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு தினங்களுக்கு பாதுகாப்பான பகுதிகளில் வசிக்க வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
மண்சரிவு அபாயம் தொடர்கிறது
கனமழை எந்தப் பகுதியிலும் பதிவாகாத போதிலும் கூட அவப்போது பெய்துவரும் மழைக்காலநிலை காரணமாக மலையகத்திலும், காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டம் மண்சரிவு அபாய எச்சரிக்கை வலயமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 200 மண்சரிவுகள் பதிவாகியுள்ளன. மலையகத்தில் 600ற்கும் அதிகமான மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆகவே காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, கண்டி, குருநாகல், நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே அபாய எச்சரிக்கை காலத்தை மேலும் சில தினங்களுக்கு நீட்டிப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் கொந்தளிப்பும் அதிகரிப்பு.
பலத்த காற்றுடன் கூடிய மழைக் காலநிலை கரையோர மாவட்டங்களில் காணப்படுகின்ற காரணத்தினால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவப்படகுகளில் 30 படக்குகள் இந்தோனேசியாவின் கடல் எல்லைப்பக்கமாக பயணிக்க ஆரம்பித்துள்ளன.
சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரவும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதிப்புகள் அதிகரிக்கின்றது.
நாட்டில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக பாதிப்பிற்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கடந்த ஒருவார கால சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம், மண்சரிவு காரணமாக 4,758 குடும்பங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த அனர்த்தத்தில் 11 வீடுகள் முற்றுமுழுதாக சேதமாகியுள்ளதுடன் ஆயிரத்து 123 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன. இதுவரையில் மூவர் இறந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.