திருவாடானை அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.5 கோடி மேல் மதிப்புள்ள போதைப் பொருள்கள் மற்றும் செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் 9 சார்பு ஆய்வாளர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் திருவாடானை எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து சோதனையிட்டபோது மொதகோலைன், ஹெராயின், ஒப்பியம் பேஸ்ட் மற்றும் 1.5 டன் எடை செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் அனைத்தையும் பறிமுதல் செய்து, அப்துல் ரஹீம், அபுல் கலாம் ஆசாத், அருள்தாஸ், சுரேஷ்குமார், முத்துராஜா, அஜ்மீர்கான், அஜ்மல்கான், அப்துல்வகாப், கேசவன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து திருவாடனையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், ‘ராமநாதபுரத்திலிருந்து இலங்கையின் வடக்கு பகுதிக்கு போதைப் பொருள்களைக் கடத்த இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி புகழேந்தி தலைமையில் 9 சார்பு ஆய்வாளர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், திருவாடனை எல்லைப்பகுதியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது பல்வேறு வகையான போதைப் பொருள்கள் மற்றும் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து போதைப் பொருள்கள் பல்வேறு மாநிலங்கள் வழியாக ராமநாதபுரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் தொண்டியில் உள்ள ஒருவர் மூலமாக படகில் இலங்கை வழியாக அவுஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.