முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று குறித்து கொழும்பு ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஏதாவதொரு வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடத்தில் இராணுவத்தினர் ஈடுப்படுத்துவது தவறு. அவ்வாறு இராணுவத்தினரை ஈடுப்படுத்துவதென்றால் அதற்கு கட்டளைத் தளபதியாக ஜனாதிபதி மாத்திரமே செயற்பட முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மஹிந்த கருத்து வெளியிட்டார்.
துறைமுகம் சம்பவத்தின் மூலம் தொழிலாளர்களின் உரிமை இழக்கப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக கடற்படையினரின் தலையீட்டில் வேலைநிறுத்தம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தான் அறிந்த வகையில் தளபதி ஒருவரின் உத்தரவின்றி பாதுகாப்பு இராணுவத்தினர் அவ்வாறான தலையீட்டினை மேற்கொள்ள முடியாதென மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்
மஹிந்தவின் இந்த கருத்தின் மூலம் ரத்துபஸ்வலயில் குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு கட்டளைத் தளபதியாக அப்போதைய ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளதா என ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.
அன்று அந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.