முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 05 பேரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரியவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்களை கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
112 இலட்சம் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 06 பேருக்கு நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் கடமை நேர வழங்குனராக பணியாற்றிய ஒருவர் மாத்திரமே நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தள்ளார்.
அதன்படி நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஏனைய 05 பேரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும், அவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.