மனிதர்களை தன்பால் இழுத்து அவர்களுடைய உள்ளங்களைக் கொள்ளை கொள்வது ஒரு கலை. சில செயல்களைச் செய்வதன் மூலம் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதுபோன்றே, சில செயல்களை விட்டுவிடுவதன் மூலமாகவும் கொள்ளை கொள்ளலாம்.
புன்சிரிப்பு நம்மை நோக்கி பிற மனிதர்களை இழுப்பது போன்றே, முகம் சுளிப்பதை விட்டுவிடுவதும் நம்மை நோக்கி அவர்களை இழுக்கும். நல்ல வார்த்தையும், மென்மையான நடத்தையும் மக்களை நம்மை நோக்கி இழுப்பதைப் போன்றே, அவர்களின் பேச்சை அழகிய முறையில் செவியேற்பதும் நம்மை நோக்கி அவர்களை இழுக்கும்.
ஒருசிலர் அதிகம் பேசமாட்டார்கள். சபைகளிலும், கூட்டங்களிலும் அவர்களுடைய சப்தத்தை அதிகம் கேட்கவும் முடியாது. ஆனால் சபையில் அவர்கள் அமர்ந்து இருக்கும்போது அவர்களுடைய தலையும், கண்களும் மட்டும் ஆடிக்கொண்டிருக்கும். எப்போதாவது உதடுகள் மட்டும் அசையும். ஆயினும் அது வார்த்தைகளுக்கான அசைவல்ல… புன்சிரிப்புக்கான அசைவு. அவர்களை மக்கள் நேசிப்பார்கள். தம் அருகில் அவர்கள் இருப்பதை விரும்புவார்கள்.
ஏன் தெரியுமா..? பிறரைத் தன்பால் கவர்ந்திழுக்கும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது. அதுதான் ‘செவியுறும் கலை’.
அடுத்தவர் பேசுவதை அக்கறையுடன் கேட்பதன் மூலமாகவும் மக்கள் மனங்களை வெல்ல முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். பிறர் பேசுவதை செவியேற்பதும் ஒரு கலையே. ஒரேயொரு நாவையும் இரண்டு செவிகளையும் ஏன் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான் தெரியுமா…? பேசுவதைவிட அதிகம் செவியுறவேண்டும் என்பதற்குத்தான்.
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட மக்கா வாழ்வின் ஆரம்ப நாட்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குறைஷிகளோ நபிகளாரை பொய்யர் என்றும் மந்திரவாதி என்றும் தூற்றிக்கொண்டிருந்தனர். நபிகளாருக்கு அருகில் மக்கள் சென்றுவிடக்கூடாது என்பதில் குறைஷிகள் கவனமாக இருந்தனர். எதை எதையோ சொல்லி மக்களைத் தடுத்துக்கொண்டிருந்தனர்.
ஒருநாள் ளம்மாத் எனும் மருத்துவர் மக்காவுக்கு வருகை தந்தார். இவர் மருத்துவத்தாலும், மந்திரத்தாலும், பைத்தியக்காரர்களுக்கும், நோயுற்ற மக்களுக்கும் சிகிச்சை செய்பவர்.
மக்கத்து மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து, ‘பைத்தியக்காரர்’ என்று கூறுவதை இவர் செவியுற்றார். மக்களிடம் கேட்டார்: ‘எங்கே அந்த மனிதர்? என் மூலம் இறைவன் அவருக்கு நிவாரணத்தை வழங்கக் கூடும்’.
மக்களும் பெருமானார் (ஸல்) அவர்களை அடையாளம் காட்டினார்கள். அண்ணலாரை சந்தித்தபோது அவர்கள் முகத்தில் இருந்த பிரகாசத்தைப் பார்த்து ஒரு கண நேரம் ளம்மாத் அசந்துபோனார். ஆயினும் வந்த வேலையை கவனிக்கத் தொடங்கினார்.
நபி (ஸல்) அவர்களிடம் ளம்மாத்: ‘முஹம்மதே! காற்றின் மூலம் மந்திரம் செய்பவன் நான். என் மூலம் பல மக்கள் நிவாரணம் அடைந்துள்ளனர். எனவே என்னருகில் வாருங்கள்’ என்று கூறியவாறு தமது மந்திர சக்தியைக் குறித்தும், தாம் இதுவரை செய்துள்ள நிவாரணங்கள் குறித்தும், தமது ஆற்றலைக் குறித்தும் பேசத்தொடங்கினார்.
அவர் தொடர்ந்து பேசப்பேச… நபிகளாரோ அமைதியுடன் அத்தனையையும் செவிமடுத்தவாறு அமர்ந்து இருந்தார்கள்.
பெருமானர் (ஸல்) அவர்கள் யாருடைய பேச்சை அமைதியாக செவிமடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கவனித்தீர்களா…? இறை நிராகரிப்பாளரான.. அதுவும் தமக்கு சிகிச்சை செய்யவந்த ஒரு மந்திரவாதியின் சொற்களை அமைதியுடன் செவிமடுக்கின்றார்கள். எவ்வளவு பெரிய மதிநுட்பம்..!
இறுதியாக ளம்மாத் தமது நீண்ட சுய தம்பட்டத்தை முடித்துக்கொண்டார். அப்போது அண்ணலார் (ஸல்) அவர்கள் மிகவும் அமைதியாகக் கூறினார்கள்: ‘அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாங்கள் புகழ்கின்றோம். அவனிடமே நாங்கள் உதவி தேடுகின்றோம். அவன் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவருக்கு எவராலும் நேர்வழி காட்டவும் இயலாது. வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்தான் என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்’.
அவ்வளவுதான்! இதனைச் செவியுற்ற ளம்மாத் திடுக்கிட்டார். ‘நீங்கள் இப்போது கூறிய அந்த வார்த்தைகளை மீண்டும் கூறுங்கள்’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அந்த வார்த்தைகளைக் கூறினார்கள். அப்போது ளம்மாத் கூறினார்: ‘இறைவன் மீது ஆணை! எத்தனையோ குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் வார்த்தைகளை நான் கேட்டிருக்கின்றேன். ஆனால் இதுபோன்ற வார்த்தைகளை இதுவரை நான் கேட்டதில்லை. நீட்டுங்கள் உமது கரத்தை.. இஸ்லாத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்’.
பெருமானார் (ஸல்) அவர்கள் தமது கரம் நீட்ட.. அண்ணலாரின் கரங்களை பிடித்தவாறு இறைநிராகரிப்பின் ஆடையைக் களைந்து இஸ்லாத்தின் ஆடையை அணிந்துகொண்டார்.
ளம்மாத் (ரலி) அவர்கள் அவரது சமூகத்தினரால் மதிக்கப்படும் ஒரு மனிதர் என்பதை நபி (ஸல்) அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவரிடம் பெருமானார் (ஸல்) கேட்டார்கள்: ‘உமது சமூகத்தை இஸ்லாத்தின்பால் அழைப்பீரா..?’. ‘நிச்சயமாக அழைப்பேன்’ என்று கூறியவாறு அழைப்பாளராக ளம்மாத (ரலி) அங்கிருந்து திரும்பினார்.
அடுத்தவர் மனதை வெல்ல வேண்டுமெனில் அவர் சொல்வதையும் கொஞ்சம் செவிமடுங்கள். அவரின் கூற்றுக்கு தலை அசையுங்கள். புருவத்தை உயர்த்துங்கள். புன்சிரிப்பை உதிருங்கள். உதடு குவியுங்கள். பெரியவரோ.. சிறியவரோ.. உங்களுடன் பேசும் நபர் மந்திரத்தால் கட்டுண்டவர் போல் உங்களை விரும்புவார்.
அடுத்தவருக்கு நமது செவிகளைக் கொடுத்தால்.. இதயங்களை அவர்கள் நமக்குத் தருவார்கள்.
மவுலவி நூஹ் மஹ்ளரி, குளச்சல்.