“சர்வதேச அமைப்புகளை அல்லது சர்வதேச நிறுவனங்களைச் சீண்டும் வகையில் ராஜபக்ச அரசு செயற்பட்டால் அவர்கள் மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.”
– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி கோட்டாபய உரையாற்றும்போது, ‘ படைவீரர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“சர்வதேச மட்டத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் இராஜதந்திர ரீதியில் செயற்பட வேண்டும். அதைவிடுத்து சர்வதேசத்துக்குச் சவால் விடும் வகையில் – மிரட்டல் விடும் வகையில் ஆட்சியிலுள்ளோர் செயற்படக்கூடாது. நல்லாட்சி அரசில் இதை நாம் சாதுரியமாகக் கைக்கொண்டோம்.
போர்க்குற்றங்களுக்காக மின்சாரக் கதிரையில் அமர்த்தப்பட இருந்த ராஜபக்சாக்களை அதிலிருந்து நல்லாட்சி காப்பாற்றியிருந்தது. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் ராஜபக்சாக்களின் ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் கைவிலங்குகளுடன் மின்சாரக் கதிரையில் அமர்ந்திருப்பார்கள்.
நல்லாட்சி அரசுக்குள் இறுதியில் நிலவிய பதவி மோகத்தால் அந்த ஆட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் கவிழ்ந்தது. மீளவும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்சாக்கள் மீண்டும் சர்வதேசத்துடன் முட்டி மோதுகின்றார்கள். இதனால் அவர்களுக்கு மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்” – என்றார்.