வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் திணைக்களங்களின் அதிகபட்சமான பயன்களைப் பெறுவதற்காக பூநகரி மற்றும் வெள்ளாங்குளம் ஆகிய கிராமங்களில் முந்திரிகை தோட்டங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட குடும்பங்களை மையப்படுத்திய சட்ட ரீதியான சமூக குழுக்களை அடுத்த இரண்டு வாரத்திற்குள் உருவாக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் மாகாண விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, பூநகரி மற்றும் வெள்ளாங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள முந்திரிகை தோட்டங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
பூநகரி மற்றும் வெள்ளாங்குளம் ஆகிய பகுதியில் முந்திரி செய்கை ஆரம்பமான வரலாற்றுப் பின்னணிகளின் விரிவான அறிமுகத்துடன் ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் முந்திரிகை தோட்டங்களை பராமரிப்பதில் காணப்படுகின்றன சவால்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது பூநகரி மற்றும் வெள்ளாங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள முந்திரிகை தோட்டங்களை அக்கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கும், ஏற்கனவே செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிப்பதோடு அவற்றுக்கான உரித்தும் அக்குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென மாகாண விவசாயத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தார்கள்.
எனினும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களை உடனடியாக தொழில் முனைவோராக்க முடியும் என்ற நம்பிக்கையில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர் சார்ள்ஸ் மகாண விவசாய திணைக்களம், அமைச்சிடமிருந்து அதிகபட்சமான பயன்களைப் பெறுவதாக அந்தக் கிராமங்களில் உள்ள தோட்டங்களில் பணியாற்றுபவர்களை உள்ளடக்கிய சட்டவலுவுள்ள சமூகக் குழுமத்தினை உருவாக்கும் திட்டத்தினை பரிந்துரைத்தார்.
இக்கிராமங்களில் சமூகக் குழு உருவாக்கபடுதல் மற்றும் சட்ட ரீதியாக பதிவு செய்தல் ஆகிய செயற்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களிற்குள் நிறைவடைய வேண்டும் என்றும் அவர் வலியுத்தியதோடு முந்திரிகை தோட்டங்களின் நில உரித்துக்களை ஒவ்வொரு தனித்தனியான குடும்பங்களுக்குடையதாக மாற்றுவது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட பல நூறு ஏக்கர் விஸ்தீரணமான மரமுந்திரிகை தோட்டம் தற்போது இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.