கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட அதிகார பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலா சபையின் அனுமதி பெற்ற விருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகளை நாளை முதல் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கடும் சுகாதார நிபந்தனைகளின் கீழ் அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சபையில் பதிவுசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து விருந்தகங்கள், உணவகங்கள் என்பனவற்றில் அங்கேயே வைத்து உணவுகளை உட்கொள்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலா சபை என்பனவற்றினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கடுமையாக பின்பற்றுமாறு விருந்தகங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, தங்களின் வாடிக்கையாளர்களுக்காக வழமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கைக்கு 50 வீதமோ அல்லது அதற்கு குறைவான அளவில் ஆசனங்கள் சமூக இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.
கைகளை கழுவுதல் மற்றும் தொற்று நீக்குவதற்கான திரவத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட கொவிட்-19 தடுப்பு ஒழுங்குவிதிகளுக்கு அமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு நாளைய தினம் கொழும்பில் ஆறு குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகளை நாளை முதல் திறக்கப்படுவதால் கொழும்பு வாழ் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பில் வசிக்கும் அதிகளவான மக்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் உணவுகளை வாங்குவதையே வழக்கமாக கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.