இந்திய மாநிலம் கேரளாவில் விஷ நாகத்தை பயன்படுத்தி இளைஞர் ஒருவர் மனைவியை கொலை செய்த விவகாரத்தில் அதி முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நாகம் தீண்டியதால் பெற்றோருடன் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த இளம்தாயார் ஒருவர் மீண்டும் நாகம் தீண்டி இறந்தார்.
இந்த வழக்கில் கணவரே திட்டமிட்டு விஷ நாகத்தை பயன்படுத்தி கொலை செய்தது அம்பலமான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சந்தேகத்தை ஏற்படுத்தும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட உத்ரா என்பவர் தூக்கத்தில் இருந்த வேளை விஷ நாகம் தீண்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுவாக விஷ நாகம் தீண்டினால், கடுமையான வலி ஏற்படும் எனவும், எந்த அயர்ந்த தூக்கத்தில் இருந்தாலும், அவர் கண்டிப்பாக திடுக்கிட்டு விழித்துக் கொள்வார் எனவும்,
நாகம் தீண்டினால் சுய நினைவுடன் இருக்கும் ஒருவர் கண்டிப்பாக அதை அறிந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.
மேலும், சக்தி வாய்ந்த மருந்து ஏதேனும் உட்கொண்டால் மட்டுமே, நாகம் தீண்டினாலும் வலி தெரியாமல் போகும் என்கின்றனர்.
தமது திட்டம் குறித்து ஏற்கெனவே புரிதல் இருந்ததால், கொலைக்கு பயன்படுத்திய நாகம் தன் மீது திரும்பாமல் உத்ராவின் கணவர் சூரஜ் பார்த்துக் கொண்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பாம்பினை காயப்படுத்தாமல் துரத்தும் வித்தை தெரிந்தவர்களால் அது சாத்தியம் எனவும் நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் உத்ரவை தாக்கிய நாகமானது கொடிய விஷம் கொண்டது எனவும், நாகம் தீண்டியதும் அதன் விஷம் இதயத்தை தாக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் நுரையீரலை பாதித்து, மூச்சுத்திணறலுக்கு கொண்டு செல்லும். பொதுவாக கொடிய விஷம் கொண்ட பாம்பு தீண்டினால், கடுமையான இருமல் ஏற்படும் எனவும், உயிருக்கு போராடும் நிலை ஏற்படும் என்கின்றனர்.
மட்டுமின்றி, நாகம் தீண்டிய பின்னர் கண்டிப்பாக உத்ரா அலறியிருப்பார் எனவும், அவ்வாறான சத்தம் வெளியே கேட்கவில்லை என்றால், குற்றவாளி சூரஜ் அதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொண்டிருப்பார் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கை அதிகாரிகள் விரிவாக விசாரிக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு இது முன்மாதிரியாக அமையக் கூடாது எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.