சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கன மழையின்போது, கட்டடத் தொழிலாளியின் வீட்டின் மேற்கூரையுடன் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தையும் 50 அடி உயரத்துக்குப் பறந்து சென்று, 100 அடி தொலைவில் உள்ள விளைநிலத்தில் விழுந்தது. அதிருஷ்டவசமாக குழந்தை சிறு காயமுமின்றி உயிர்த் தப்பியது.
வாழப்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, வாழப்பாடி கணபதி கவுண்டர் தெருவில் வசித்து வரும் கட்டடத் தொழிலாளி இளையராஜா, முருகன், செந்தில் ஆகியோரது வீடுகளின் இரும்புத் தகடுகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தது.
இளையராஜா- அமராவதி தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தை சுபஸ்ரீயை, மேற்கூரையின் இரும்புச் சட்டத்தில் தொட்டில் கட்டித் தூங்க வைத்திருந்தனர். அந்த மேற்கூரை சூறைக் காற்றில் அடியோடு பெயர்ந்து 50 அடி உயரத்துக்கு மேலாகப் பறந்து சென்று, 100 அடி தூரத்தில் உள்ள சோளத்தட்டை விவசாய நிலத்தில் விழுந்தது.
இதில், மேற்கூரையோடு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையும் 50 அடி உயரத்துக்குப் பறந்து சென்று, 100 அடி தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்தது.
குழந்தையின் பெற்றோர் இளையராஜா- அமராவதி, பாட்டி ராணி ஆகியோர் பல இடங்களில் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக, சோளக்காட்டில் கிடந்த மேற்கூரையை புரட்டிப் பார்த்தபோது, மேற்கூரை போட்டு அழுத்தியதில் அழுகை சப்தம் வெளியில் வராமல் குழந்தை திணறிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே குழந்தையை பெற்றோர் உயிருடன் மீட்டனர்.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், கட்டடத் தொழிலாளி இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று இந்த அதிருஷ்டக் குழந்தையைக் கண்டு வருகின்றனர்.